×

மாணவர்கள் தொடர் போராட்டம் * மறுகூட்டல் கட்டணம் ரத்து முதல்வர் தகவல்: தெலங்கானாவில் இன்டர்மீடியட் தேர்வு முடிவில் குளறுபடி

திருமலை, ஏப்.25: தெலங்கானாவில் இன்டர்மீடியட் தேர்வில் குளறுபடி நடந்ததால் 20 பேர் தற்கொலை செய்துகொண்டதால் முதல்வர் அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு கடந்த 4 நாட்களாக போராட்டம் செய்து வருகின்றனர். இதையடு்து மறுகூட்டலுக்கான கட்டணம் ரத்து செய்யப்படும் என முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் இன்டர்மீடியட் தேர்வை 9 லட்சத்து 74 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் அனைத்தும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வெளியிடப்பட்டது. இதில் 3 லட்சத்து 28 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாணவர்கள் சங்கத்தினர் கூறுகையில், 9 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்துவதற்கு குறுகிய கால அவகாசம் வழங்கி ஒரு நாளைக்கு 30 விடைத்தாள்கள் திருத்த வேண்டிய ஆசிரியருக்கு 60 விடைத்தாள்கள் திருத்த வேண்டும் என்று பணிச்சுமை வழங்கியுள்ளனர். இதன் காரணமாக ஆசிரியர்கள் சரியான முறையில் விடைத்தாள்களை திருத்தவில்லை. அவர்கள் அலட்சிமாக இருந்ததே அதிக மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைய காரணமாகிவிட்டது.

மேலும் திருத்தப்பட்ட விடைத்தாள்களை டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்த தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அலட்சியமாக நடந்து கொண்டு பல்வேறு குளறுபடிகளை செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதில், முதலாம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை தற்போது வெளியான தேர்வு முடிவில் தேர்ச்சி பெறவில்லை என்றும், உருது பாடப்பிரிவை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு அரபிக் தேர்வு செய்யப்பட்டதாக கூறி பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையத்தை மாற்றி தேர்வு எழுதி இருப்பதாக கூறி ஒரு மையத்தில் தேர்வில் ஆஜராகதது போன்றும் மறு மையத்தில் தேர்வில் ஆஜரானது போன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பல்வேறு குளறுபடிகளை தனியார் நிறுவனம் செய்திருப்பதாகவும் இதன் காரணமாக இன்டர்மீடியட் தேர்வு முடிவில் பெரும் சர்ச்சையையும் குளறுபடிகளும் நிறைந்து உள்ளது. அந்த தனியார் நிறுவனம் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமராவின் நெருங்கிய நண்பரான ராஜு என்பவருக்கு சொந்தமான நிறுவனம் என்பதால் எந்தவித முன் அனுபவம் இல்லாத அந்நிறுவனத்திற்கு விடைத்தாள் பதிவேற்றம் செய்யும் ஒப்பந்தம் வழங்கியிருப்பதாக எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

அரசு நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனம் செய்த தவறால் இதுவரை 20 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். அரசு மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனம் செய்த குளறுபடியால் மாணவர்கள் ஒவ்வொரு விடைத்தாள்களை மறுகூட்டல் செய்வதற்கு தலா ₹150 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை முழுவதுமாக ரத்து செய்து மாணவர்கள் அனைவருக்கும் மறுகூட்டலுக்கு அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.  தொடர்ந்து பாஜ, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும், மாணவர் சங்கத்தினர், முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிடுவது உட்பட பல்வேறு போராட்டங்களில் கடந்த 4 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் சந்திரசேகர ராவ், இன்டர்மீடியட் தேர்வாணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில், மாநிலம் முழுவதும் 9 லட்சத்து 74 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இதில் 3 லட்சத்து 28 ஆயிரம் மாணவ, மாணவிகள் தோல்வி அடைந்துள்ளனர். இதற்காக பல மாணவர்கள் தற்கொலை செய்தது துரதிஷ்டவசமானது. தற்கொலை என்றுமே பிரச்னைகளுக்கும் தீர்வாகிவிடாது. வருங்காலத்தில் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. எனவே, இனி வரும் காலங்களில் யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. மேலும் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் மறுகூட்டலுக்காக விண்ணப்பிக்கும் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. ஆனால் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இது பொருந்தாது. தவறு செய்தவர்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : Intermediate Examination ,Telangana ,
× RELATED தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து..!!