×

போடியில் குடிமகன்கள் கூடாரமான நகராட்சி வளாகம்

போடி, ஏப்.25: போடியில் காவல்நிலையம் அருகில் உள்ள நகராட்சி வளாகத்தில் குடிமகன்கள் கும்மாளம் அடித்து வருகின்றனர். இதனை தடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். போடி காமராஜ்சாலையில் நகர் காவல்நிலையம் உள்ளது. இதன் அருகில் நகராட்சி வளாகம் உள்ளது. இங்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக கறிக்கடை, கருவாட்டு கடை, காய்கறி கடைகள்,  வாழைஇலை கடைகள் என வாடகைக்கு விடப்பட்டு இயங்கி கொண்டிருந்தன. இந்நிலையில் அடிப்படை வசதிகள் இல்லாததால் இந்த வளாகத்தை முற்றிலும் இடித்து அகற்றிவிட்டு ரூ.40 லட்சம் செலவில் 30 கடைகள் கொண்ட புதிய வளாகம் கட்டப்பட்டது. தொடர்ந்து கடைகளை வாடகைக்கு விட நகராட்சியிலிருந்து ஏலம் விடப்பட்டது. அதிக வாடகை என்பதால் குறைந்தவர்களே கடைகளை ஏலம் எடுத்தனர். ஆனால் கடைகள் திறந்தும் சரிவர வியாபாரம் இல்லை. இதனால் நகராட்சிக்கு அதிக வாடகை கட்ட முடியாமல் வியாபாரிகள் அடைத்துவிட்டனர். மற்ற கடைகளையும் யாரும் சரியாக ஏலம் எடுக்க முன்வராததால்  கடைகள் முழுவதும் அடைத்து கிடக்கின்றன. வளாகம் காட்சிபொருளாக இருக்கிறது.

இந்த வளாகத்திற்குள் ஒரே ஒரு கடை மட்டுமே இயங்குகிறது. மற்ற கடைகள் திறக்காததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது. குடிமகன்கள் மது குடிப்பதற்கும், பலான செயலை அரங்கேற்றுவதற்கும் இந்த வளாகத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அருகில் உள்ள கடைகள், குடியிருப்புவாசிகள் அதிருப்தியடைந்துள்ளனர். மக்ள் கூறுகையில், ‘‘நகர் காவல்நிலையம் அருகில் இருந்தும் தவறான விசயங்கள் நடக்கின்றன. அருகில் பழமை வாய்ந்த சுப்பிரமணியர் கோயில், பூக்கடைகள், ஆரம்ப பள்ளியும் உள்ளது. இந்த இடத்தில் குடிமகன்கள் கொட்டம் அடித்து வருகின்றனர். இதனால் இளைஞர்கள், மாணவர்களின் வாழ்க்கை தடம்புரலும் ஆபத்து உள்ளது. எனவே நகராட்சி வளாகத்தில் குடிமகன்கள் அட்டகாசத்தை போலீசார் தடுக்க வேண்டும். மேலும், தொடர்ந்து கட்டிடங்கள் செயல்பாடு இல்லாமலிருப்பதால் பாழ்பட்டு வருகின்றன. நகராட்சி வளாகத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : campus ,citizens ,
× RELATED கிம்ஸ் ஹெல்த் இலவச இதய மருத்துவ முகாம்...