×

திருச்செந்தூர்- ஆலந்தலை சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடிய கழிவுநீர்

திருச்செந்தூர்,  ஏப். 24:  திருச்செந்தூர்- ஆலந்தலை சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர்  ஆறாக பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். திருச்செந்தூரில் பாதாள சாக்கடை திட்டம்  துவங்கி 16 ஆண்டுகளாகியும் இன்னும் திட்டப்பணி முழுமையாக முடியவில்லை.  துவக்கத்தின்போது 4,600 இணைப்புகள் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. திட்டம் அரைகுறையாக இருந்த நிலையில் 2015ம் ஆண்டு பாதாள சாக்கடை  திட்டம் அவசரமாக துவக்கிவைக்கப்பட்டபோதும் இத்திட்டத்தை குடிநீர்  வடிகால் வாரியம் பேரூராட்சியிடம் முறையாக இன்னும் ஒப்படைக்கவில்லை. இதுநாள் வரை  திருச்செந்தூர் பேரூராட்சியில் 65 இடங்களில் மட்டுமே பாதாள சாக்கடை  திட்டத்தில் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் 4 ஆயிரத்திற்கு மேல் இணைப்பு  கொடுக்க வேண்டிய நிலையில் பல்வேறு தெருக்கள் காத்திருக்கின்றன. இதனிடையே முறையான பராமரிப்பின்றி ஆங்காங்கே பாதாள சாக்கடை மூடி உடைந்து  அதில் உள்ள கழிவுநீர் பொங்கி பிரவாகம் எடுத்து தெருவெல்லாம் அவ்வப்போது ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும் அவலம் தொடர்கிறது. பின்னர் பாதாள சாக்கடை கழிவுநீர் மாதக்கணக்கில்  தேங்கி நிற்பதால் நோய் பரப்பும் அபாரம் நிலவுகிறது. மேலும் வீதிகளில் எங்கு பார்த்தாலும் குப்பைகள், கழிவுநீர் தேங்கி  துர்நாற்றம் வீசுகிறது. இந்நிலையில் திருச்செந்தூரில் இருந்து  ஆலந்தலைக்கு செல்லும் சாலையில் பாதாள சாக்கடை மேன்ஹோல் உள்ளது. அங்கு பாதாள  சாக்கடை கழிவுநீரோடு செப்டிக் டேங்க் கழிவுகளும் கலந்து வருவதால் பொங்கி  ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரப்பும் அபாயம் நிலவுகிறது. இதனால் அப்பகுதியை பாதசாரிகள் உள்ளிட்ட பலரும் மூக்கை பிடித்துக்கொண்டு  முகம் சுளித்து  செல்கின்றனர்

Tags : road ,Tiruchendur ,Aalanthalai ,
× RELATED அருப்புக்கோட்டை காந்திநகர் பஸ்...