×

முத்துப்பேட்டையில் கோடை வெயிலை சமாளிக்க முலாம்பழம் விற்பனை விறுவிறுப்பு

முத்துப்பேட்டை, ஏப். 24: முத்துப்பேட்டையில் கோடை வெயிலை சமாளிக்க முலாம்பழம் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் கடந்த ஒரு மாதமாக  கடும் வெயில் அதிகரித்துள்ளது. இதனால் வியாபாரிகள் பொதுமக்கள் மின்தடை ஏதும் ஏற்பட்டால் பெரிதும் அவதிக்குள்ளாகி விடுகின்றனர். கடும் வெப்பத்தை சமாளிக்கும் வகையில் குளிர்பான கடைகள், பழரச கடைகளை நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்கி உள்ளனர். கோடை வெயிருக்கு இதமான பழங்கள் பட்டியலில் ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, மாதுளை, அன்னாசி போன்ற பழங்கள் இடம்பெற்று இருந்தாலும் முலாம்பழம் என்னும் கிர்ணி பழங்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று உள்ளன.முன்ெபல்லாம் கோடைகாலத்தில் அதிகமாகக் கிடைக்கக் கூடிய பழவகைகளுள் முலாம்பழம் முக்கியமானது.

நல்லசுவை, உடலுக்கு ஆரோக்கியம், மருத்துவ குணம் நிறைந்தது என்று பலரும் கூறுவதால் இந்த முலாம்பழ ஜூஸ் மீது மக்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக முத்துப்பேட்டை பகுதியில் உள்ள பழக்கடைகளில் கடந்த சில நாட்களாக முலாம்பழம் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வியாபாரிகள் சாலையோரத்திலும் கொட்டி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திராவில் அதிகம் விளையும் முலாம்பழங்கள் சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெரு நகரங்களுக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் கிராம பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது.  முத்துப்பேட்டைக்கு திருச்சி, மதுரை, தஞ்சை பகுதியிலிருந்து முலாம் பழங்கள் வருகின்றன. வியாபாரிகளுக்கு கிலோ ரூ.20க்கு கிடைக்கும் பழம் பொதுமக்களிடம் கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பழம் சுமார் 500 கிராம் எடையிலிருந்து 1.50 கிலோ எடை வரை உள்ளது. இதனை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதனால் முத்துப்பேட்டையில் முலாம் பழங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இது குறித்து வியாபாரி பாலகுமார் கூறுகையில்,முலாம்பழம் கோடைகாலத்தில் அதிகமாகக் கிடைக்கக்கூடிய பழவகைகளுள் முக்கியமானது. இதனை தற்போது கிர்ணிப் பழம் என்று கூறுகிறோம். கோடை காலத்தில் மக்கள் கிர்ணி பழச்சாறு அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்பழத்தின் தாயகம் இந்தியா ஆகும். ஆனால் தற்போது இதனை நம் நாட்டில் பயன்படுத்துவது குறைந்துள்ளது. சீனா இப்பழ உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.

இதன் தனிப்பட்ட சுவை, மணம் மற்றும் சாறு நிறைந்த சதைப்பகுதி ஆகியவை இதனை உண்ணும் ஆர்வத்தை தூண்டுகின்றன. இப்பழம் தரையில் படர்ந்து வளரும் கொடி வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. ஊட்டசத்து மிகுந்த மணல் பரப்பில் இது செழித்து வளரும். தேனீக்கள் இத்தாவரத்தில் மகரந்த சேர்க்கை நடைபெற முக்கிய காரணிகளாகின்றன. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை அதிகளவு கிடைக்கிறது. முலாம்பழம்  பொதுவாக வட்டம் அல்லது நீள்வட்ட வடிவில் 4 முதல் 6 அங்குல விட்டத்துடன் காணப்படுகிறது. 1500 கிராம் எடை அளவினையும் தாண்டியும் விற்பனைக்கு வருகிறது. இப்பழத்தின் சதைப்பகுதி மெதுவாகவும், சாறு நிறைந்தும் ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. பழத்தின் மையப்பகுதி குழிந்து வெள்ளை நிற விதைகளைக் கொண்டுள்ளது. பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது. அதனால் மக்கள் ஆர்வத்துடன் பேரம் பேசாமல் வாங்கி செல்கின்றனர். வியாபாரம் தற்போதைய வெயிலை போன்றே விறுவிறுப்பாக உள்ளது என்றார்.

Tags : Muthupet ,
× RELATED முத்துப்பேட்டை அருகே கலைத்திருவிழா...