×

குறிஞ்சிப்பாடியில் பாலத்துக்கு செல்லும் சாலையில் ஜல்லிகள் சிதறிக் கிடப்பதால் விபத்து அபாயம்

குறிஞ்சிப்பாடி, ஏப். 24:  குறிஞ்சிப்பாடி மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள கழுதை வாய்க்காலில் கட்டப்பட்டுள்ள பாலத்தையும், சாலையையும் இணைக்கும் இடத்தில் ஜல்லிகள் பெயர்ந்து கிடப்பதால் விபத்து அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிஞ்சிப்பாடியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள கழுதை வாய்க்காலில் ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்பில் பாலம் கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இப்பணியால் போக்குவரத்து தடைபடாமல் இருக்க மாற்றுப்பாதை அமைத்து பாலம் கட்ட தொடங்கினர். பாலம் கட்ட துவங்கியதில் இருந்து மழை பெய்ய துவங்கியதால், பணி மந்தமாகவே நடைபெற்று வந்தது. மழை பெய்ததால் பாதையை உடைப்பதும், மீண்டும் பாதை அமைப்பதும் வழக்கமாக இருந்து வந்தது. இதன் காரணமாக அவ்வப்போது பேருந்துகள் குறிஞ்சிப்பாடி நகருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக சென்றது. மேலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஒருவழியாக ஒரு சில மாதங்களுக்கு முன்னர் பாலம் கட்டும் பணி முடிவுற்றது. பாலத்துக்கும் சாலைக்கும் இடையே உள்ள இடைவெளியில் ஜல்லிகள் கொட்டி இணைத்தனர். ஆனால் ஜல்லிகள் கொட்டப்பட்ட இடத்தில் தார் ஊற்றி சாலை அமைக்கவில்லை. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் மக்கள், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகள், நடந்து செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பேருந்துகள், லாரி, வேன் போன்றவைகள் இச்சாலையின் வழியே செல்லும் போது, புழுதிப் புயலை ஏற்படுத்தி செல்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.பேருந்துகள் ஏற்படுத்தும் புழுதி புயலால், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு கண் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் ஆஸ்துமா போன்ற நோய் பாதிப்புக்கு ஆளாகும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே பாலத்தையும், சாலையையும் இணைக்கும் இடத்தில் ஜல்லிகள் கொட்டப்பட்டதின் மேலே தார் ஊற்றி சாலை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : jallies ,road ,bridge ,Kurinpipadi ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...