×

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் பாழடைந்த கட்டிடங்களை அகற்றிவிட்டு விளையாட்டு திடல் அமைக்க வேண்டும்

காட்டுமன்னார்கோவில், ஏப். 24: காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் அமைந்துள்ளது வீராணம் ஏரிக்கான தமிழக அரசின் பொதுப்பணித்துறை அலுவலகம். சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக வீராணம் ஏரி சம்பந்தப்பட்ட அலுவல்கள் இங்குள்ள கட்டிடங்களில்தான் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தண்ணீர் வரத்து மற்றும் திறப்பு, மேலும் பாழடைந்த அகற்றப்பட்ட கதவணைகள், வெள்ள அபாய காலங்களில் சாலை அரிப்புகளை சரிசெய்ய பயன்படும் மண்மூட்டைகள் என வீராணம் ஏரியின் பராமரிப்புக்கான பொருட்கள் உள்ளிட்டவைகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. வெள்ளியங்கால் வடிகால் ஓடை அருகே உள்ள இந்த பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தின் பரப்பு சுமார் 10 ஏக்கருக்கும் மேலாக இருக்கும். இந்த வளாகத்தினுள் பழைய கால தர்கா மற்றும் முனீஸ்வரன் கோயில் ஒன்றும் இருந்துள்ளது. மேலும் மாமரம், வாழை மரம், தென்னை மரம், புளியமரம், கொடுக்காப்புளி மரம், கல்தேக்கு, நாட்டுத்தேக்கு உட்பட 100க்கும் மேற்பட்ட பழ மற்றும் பூ மரங்களும் அதன் நடுவே பணியாளர்களின் குடியிருப்பு, பயணியர் மாளிகை மற்றும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அலுவலகம் என சுமார் 25க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உள்ளன. மீன்வளத்துறை அலுவலகத்தின் மீன்வளர்ப்பு தொட்டிகள் மற்றும் அதன் அலுவலக கட்டிடங்களுடன் சேதமடைந்த கைவிடப்பட்ட கட்டிடங்களும் அடங்கும்.திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அருகே இருந்தாலும் இந்த வளாகம் அவ்வளவாக பார்வையாளர்களுக்கு புலப்படாது. ஏனெனில் பசுமை நிறைந்த வனத்துக்குள் இது அமைந்திருப்பதாலும் சற்று தாழ்வான பகுதியில் இருப்பதாலும் இவை புதிய பார்வையாளர்களின் கவனத்தை பெறாது. எந்த பயனும் இல்லாமல் கைவிடப்பட்டும் சேதமடைந்தும் 20க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் வெறும் காட்சிப்பொருளாக உள்ளன. இதை பயன்படுத்தி இரவு நேரங்களில் ஏரியின் கரையோரமாக செல்லும் சமூக விரோதிகள் இங்கு வந்து மது அருந்துவது பாட்டில்களை அங்கேயே உடைப்பது, இயற்கை உபாதைகளில் ஈடுபடுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் அவ்வப்போது எழுந்தவண்ணமாகவே உள்ளன. இதனை தவிர்க்கும் பொருட்டு வீராணம் ஏரி பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தை சுற்றிலும் தரமான சுற்றுச்சுவர் அமைத்து, கைவிடப்பட்ட கட்டிடங்களை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் பசுமை பூங்கா, குழந்தைகளுக்காக விளையாட்டு திடல் மற்றும் பெரியவர்களுக்கான நடைபயிற்சி பாதை ஆகியவைகளை ஏற்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் போது, மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால் தங்களுக்கு மிகுந்த பயன்பாடாக இருக்கும். மேலும் தமிழக அரசு இதன்மூலம் வருமானமும் பெறமுடியும் எனவும் தெரிவித்தனர். பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையான இதை அலட்சியப்படுத்தாமல் மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை நிர்வாகம் இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு, அதற்கான நிதியை ஒதுக்கி திட்ட பணிகளை துவங்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துக்கொண்டனர்.

Tags : Lalbetta ,neighborhood ,buildings ,game ,Kadamannarko ,
× RELATED 8070 ச.அடி கொண்ட அனைத்து வீடுகள் மின்...