×

மக்களவை தேர்தல் இடுக்கியில் 74 சதவீதம் வாக்குப்பதிவு வாக்கு இயந்திரம் பழுதால் டென்ஷன்

மூணாறு, ஏப்.24:  இடுக்கி மக்களவை தொகுதியில் நேற்று 74 சதவீதம் வாக்குகள் பதிவாகின. கேரள மக்களவை தேர்தல் நேற்று நடைபெற்றது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இடுக்கி  மாவட்டத்தில் மட்டும் 1305 வாக்கு சாவடி மையங்களில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. தேவிகுளம் தொகுதியில் உள்ள 195 வாக்கு சாவடி மையங்களில் நேற்று காலை 7 மணி முதல் வாக்கு பதிவு செய்ய பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் பழங்குடி மக்கள் வசிக்கும் இடமலைகுடி பகுதியிலும் வாக்குகள் கணிசமாக பதிவாகின. லட்சுமி சொக்கநாடு, செண்டுவாரை, கல்லார்  போன்ற பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீரென்று பழுதடைந்தது.  பின்னர் அதிகாரிகள் மாற்று இயந்திரங்கள் அமைத்து வாக்குப்பதிவை தடங்கல்  இல்லாமல் நடத்தினர்.  

தேவிகுளம் எம்எல்ஏ ராஜேந்திரன் வாக்குச்சாவடி எண் 50ல் வாக்குப்பதிவு செய்தார். கே.பி.சி.சி. துணைதலைவர் ஏ.கேமணி 50ம் எண் வாக்கு சாவடியில் வாக்கை பதிவு செய்தார். கேரள மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம்.மணி பைசன்வாலி பஞ்சாயத்தில் 169ம் எண் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார். வாக்களித்த பின் அமைச்சர் மணி  கூறுகையில், ‘‘இடுக்கியில் இடதுசாரி ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிடும்  ஜோய்ஸ் ஜோர்ஜ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார். மீண்டும்  பாஜ ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது’’ என்றார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் இடுக்கியில் 70.1 சதவீதம் வாக்குகள் பதிவானது. நேற்றைய தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 74 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

Tags : Tens of thousands ,Lok Sabha ,
× RELATED தெற்கு காசாவில் இருந்து தனது படைகளை திரும்பப் பெற்றது இஸ்ரேல்!