×

குடிநீர் இல்லை; உடைமாற்ற இடம் இல்லை அடிப்படை வசதிகள் இல்லாத ஆரோ கடற்கரை

காலாப்பட்டு, ஏப். 24: விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக ஆரோ கடற்கரை விளங்கி வருகிறது. சர்வதேச நகரமான ஆரோவில் அருகில் இந்த கடற்கரை அமைந்துள்ளதால் ஆரோவில்லில் வசிக்கும் ஏராளமான வெளிநாட்டினர் இங்கு சூரிய குளியல் எடுத்து வந்தனர்.மேலும் இப்பகுதி சுற்றுலா நகரமான புதுச்சேரியையொட்டி அமைந்திருப்பதா புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகளும் இங்கு அதிகளவில் வர தொடங்கியுள்ளனர். அதேபோல உள்ளூர் மக்களும் அதிகளவில் வர தொடங்கினர். இதனால் வெளிநாட்டினர் சூரிய குளியல் எடுக்கும் பழக்கம் நின்று போனது. அதேவேளை முன்பை விட தற்போது இங்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனிடையே சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இங்கு குடிநீர் வசதியுடன் கூடிய சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது. இதனிடையே இந்த விளையாட்டு பூங்கா போதிய பராமரிப்பின்றி சேதமடைந்தது. தொடர்ந்து இப்பகுதியில் கடல் அரிப்பு அதிகமானதால் விளையாட்டு பூங்கா அடித்து செல்லப்பட்டு விட்டது. இதனால் இங்கு குழந்தைகளுடன் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.குடிநீர் வசதி இல்லாததால் தாகம் எடுக்கும்போது கடும் சிரமம் அடைகின்றனர். மேலும் இப்பகுதியில் கடலில் குளிப்பவர்கள் உடை மாற்ற இடம் எதுவும் இல்லை. இதனால் பல்வேறு வகைகளில் சங்கடப்பட வேண்டியுள்ளது.

தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் வெளியூர் மட்டுமின்றி, உள்ளூரை சேர்ந்தவர்களும் மாலை நேரங்களில் இங்கு குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள். அவர்களுக்கு போதிய அடிப்படை வசதியில்லை. இப்பகுதியில் தற்போது அதிகளவில் கடைகள் முளைத்து வருவதால், குப்பைகளும் அதிகளவில் சேருகிறது. முன்பெல்லாம் கோட்டக்குப்பம் பேரூராட்சி சார்பில் இங்கு சேரும் குப்பைகள் அகற்றப்பட்டு வந்தது. தற்போது முறையாக அகற்றாததால் குப்பை சேர்ந்து சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது.எனவே, இப்பகுதியில் குடிநீர் வசதியுடன் மீண்டும் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்க வேண்டும், சுற்றுலா பயணிகள் கடலில் குளித்த பிறகு, துணி மாற்றுவதற்கு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும், ஆரோக்கியமான உணவுகள் கிடைக்கும் வகையில் கடைகளை முறைப்படுத்த வேண்டும், இங்கு சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : facilities ,beach ,shore location ,
× RELATED தூத்துக்குடி கடற்கரையில் இருந்து...