×

புதுச்சேரி கடற்கரையில் உருவான செயற்கை மணல் பரப்பு மறைந்து போகும் சூழல்

புதுச்சேரி, ஏப். 24: சுற்றுலா நகரமான புதுச்சேரியின் பாரம்பரிய பிரெஞ்சிந்திய கட்டிடங்கள், நீண்ட கடற்கரை, மணக்குள விநாயகர் கோயில், ஆஸ்ரமம், சுண்ணாம்பாறு போட்அவுஸ், ஊசுட்டேரி பறவைகள் சரணாலயம், தாவரவியல் பூங்கா உள்ளிட்டவற்றை பார்த்து ரசிக்க வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர். ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதால் அரசுக்கு சுறறுலா மூலம் அதிக வருவாய் கிடைக்கிறது. இதனால் சுற்றுலாவை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக மத்திய அரசு ரூ.107 கோடி நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே கடற்கரையில் செயற்கை மணல்பரப்பு உருவாக்கும் திட்டமாகும். புதுச்சேரியில் கடற்கரையில் 20 ஆண்டுகளுக்கு முன் இயற்கை மணல்பரப்புடன் கூடிய அழகிய கடற்கரை இருந்தது. மணல்பரப்பில் கால்பதித்தும், கடலில் குளித்தும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக இருந்து வந்தனர்.

நாளடைவில் கடல் அரிப்பால் மணல்பரப்பு மறைந்து போனது. கடற்கரைக்கு சுற்றுலா வருபவர்கள், வெறும் கற்களையே பார்க்கும் நிலை இருந்தது. இதனால் புதுச்சேரி கடற்கரையில் கடல் அரிப்பை தடுக்கவும், இழந்த கடற்கரையை மீண்டும் பெறுவதற்காகவும் மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவன (நியாட்) நிபுணர்கள் பலகட்ட ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கான பணியை தொடங்கினர். இதற்காக ரூ.25 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக புதுச்சேரியில் செயற்கை மணல்பரப்பு திட்டப்பணி செயல்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக, அலைகளால் மணல் அடித்து செல்லாமல் இருப்பதற்காக கடலில் கற்கள் கொட்டப்பட்டது. மேலும், வம்பாகீரப்பாளையம் துறைமுக முகத்துவாரத்தில் அள்ளப்பட்ட மணல் எடுத்துவரப்பட்டு தலைமை செயலகம் எதிரே நிரப்பப்பட்டது. மேலும், ராட்சத குழாய் மூலம் சீகல்ஸ் ஓட்டல் பின்புறம் மண் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இதன் மூலம் தலைமை செயலகம் எதிரே மணல்பரப்பு உருவாகத் தொடங்கியது.

மேலும், அலைகளால் மணல் மீண்டும் கடலுக்குள் அடித்து செல்லாமல் இருக்கவும், கடற்கரையில் மணல்பரப்பு தானாகவே மணல் படியும் வகையிலும் தலைமை செயலகம் எதிரே முக்கோண ராட்சத இரும்பு பேழை கடலினுள் இறக்கி நிலை நிறுத்தப்பட்டது. அந்த பேழைக்குள் நீரும், மணலும் நிரப்பப்பட்டது. வம்பாகீரப்பாளையம் முகத்துவாரம் தூர்வாரும் மணல் கொட்டப்பட்டதாலும், ராட்சத பேழையாலும் தலைமை செயலகம் எதிரே கடற்கரையில் ஓரளவுக்கு மணல் உருவாகியுள்ளது. இதனால் கடலில் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் ஜாலியாக குளித்தும், கால்பதித்தும் மகிழ்ந்து வருகின்றனர்.  கடற்கரையோரம் உருவான மணல்பரப்பு மறையாமல் இருக்கவும், காந்தி சிலை வரையிலும் மணல்பரப்பு விரிவடையவும் வம்பாகீரப்பாளையம் முகத்துவாரத்தில் தூர்வாரப்படும் மணல் தொடர்ந்து அங்கு கொட்டப்பட வேண்டும். ஆனால், டிசம்பர் மாதத்திற்குப்பின் முகத்துவாரம் தூர்வாரப்படாததால், மணல் கொட்டப்படவில்லை. இதனால் தலைமை செயலகம் எதிரே கடற்கரையில் உருவான மணல்பரப்பு சுருங்கி மாயமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதற்கான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : sand spread ,coast ,Puducherry ,
× RELATED கடல் வழியாக பணம், மது கடத்தலை தடுக்க...