×

தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைத்தது போலீசாருக்கு 13வது மாத ஊதியம்

புதுச்சேரி, ஏப். 24: புதுச்சேரி காவலர்களுக்கான 13வது மாத ஊதியம் மற்றும் சீருடை இதுவரை வழங்கப்படாதது குறித்து போலீசார் குமுறலில் உள்ளனர். தங்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் காவலர் தேர்வை உடனடியாக நடத்தவும் வலியுறுத்தியுள்ளனர். புதுச்சேரி காவல்துறையில் டிஜிபி முதல் காவலர்கள் வரை 3,500க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் விடுப்பு நாட்களை கருத்தில் கொண்டு 13வது ஊதியம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் சில ஆண்டுகளாக இந்த ஊதியம் அவர்களுக்கு தாமதமாக வழங்கப்பட்டது. 2018ம் ஆண்டிற்கான 13வது மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. கவர்னர், முதல்வர் இடையிலான மோதல் காரணமாக இந்த ஊதியம் தாமதமாவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பிறகு மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், தற்போது வரை இந்த ஊதியம் வழங்கப்படாததால் காவலர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

 மேலும் கடந்த 20 நாட்களாக தீவிர தேர்தல் களப்பணிகளில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தேர்தல் கால சிறப்பு ஊதியத்திற்கான பட்டியல் மாநில தேர்தல் துறையால் வெளியிடப்பட்டது. அதில் அதிகாரி முதல் காவலர்கள் வரை அனைவருக்கும் தலா ரூ.300 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மற்ற அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணி ஊதியம் கூடுதலாக வழங்கப்படுவதாக குமுறும் காவலர்கள், தங்களுக்கு இதுவரை 13வது மாத ஊதியம் வழங்காதது குறித்தும் வெளிப்படையாக கூறி வருகின்றனர். மேலும் 24 மணி நேரமும் பணியாற்றும் காவலர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகள்கூட மறுக்கப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக காவலர்களுக்கு சீருடையோ மற்ற உபகரணங்களோ அல்லது அதற்கான தொகையோ வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர்.

 5 மாதங்களுக்கு முன், புதுச்சேரி காவல்துறையில் புதிதாக ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் வயது வரம்பு பிரச்ைனயை எழுப்பி அதுவும் கிடப்பில் போடப்பட்டு விட்டது. இதுவரை ஏன் இத்தேர்வு நடத்தப்படவில்லை என வேதனை தெரிவிக்கும் காவலர்கள், அதிலுள்ள சிறிய குறைபாடுகளை உடனே களைந்து புதிய காவலர்களை நியமிப்பதன் மூலம் தங்களுக்கு பணிச்சுமை குறையும் எனவும் ஆதங்கப்படுகின்றனர். இவ்விவகாரத்தில் முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகள் காவலர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கிடையே 13வது மாத ஊதியத்தை வழங்க அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு, ஏற்கனவேநிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால் உடனே வழங்க முடியவில்லை. தேர்தல் ஆணையத்தில் அனுமதி தற்போது கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து முதல்வர் அலுவலக வட்டாரத்தில் விசாரித்தபோது: காவலர்களுக்கு 13வது மாத ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களுக்குள் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

Tags : EC ,Commission ,
× RELATED சசி தரூருக்கு தேர்தல் ஆணையம்...