மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு 26ம் தேதி முதல் துவக்கம்

பெரம்பலூர்,ஏப்.24: பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு, 2ம்நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 26ம் தேதி முதல் நடக்கிறது. பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.தற்போது ஆசிரியர் தேர்வாணையம் அறிவித்துள்ள ஆசிரியர் தகுதித்தேர்வுக்கும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 2ம் நிலை காவலர் பணியிடத்துக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் 2ம் நிலை காவலர் தேர்வுகளுக்கு வருகிற 26ம் தேதி காலை முதல் பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளது.  ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒவ்வொரு வார சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படவுள்ளது.

2ம் நிலை காவலர் தேர்வுக்கு திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது. இந்த பயிற்சியின்போது இலவசமாக பயிற்சி குறிப்புகள், முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்படும். மாதிரி தேர்வுகள் ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் 2ம் நிலைக் காவலர் தேர்வு ஆகிய 2 தேர்வுக்கும் ஒவ்வொரு வார புதன் கிழமைகளில் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

× RELATED நோயின்றி, மருந்தின்றி நலமாக வாழ்வது...