திருச்சி புறநகர் பகுதியில் பரவலாக மழை நகரில் வானம் மேகமூட்டத்துடன் ஏமாற்றியது

திருச்சி, ஏப்.23:  திருச்சியில் கடந்த சில தினங்களாக மக்களை வாட்டி வறுத்தெடுத்த கோடை வெயிலுக்கு இதமளிக்கும் வகையில் நேற்று மாலை புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால், ஓரளவு வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் துவங்கும் முன்னரே வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் ஏற்பட்ட வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்த போதும் பின்னர் மழை இல்லை. இதனால் தமிழகத்தில் 100 டிகிரியை தாண்டிதான் வெப்பநிலை இருந்தது. இந்த கோடை வெயிலின் உக்கிரம் காரணமாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகள் கூட தற்போது நண்பகல் நேரங்களில் வெறிச்சோடி கிடப்பதை காண முடிகிறது. கோடை என்றால் மக்களுக்கு வெட்கையும், வியர்வையும் தான் ஞாபகம் வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பகல் மற்றும் இரவு நேரங்களில் சிறிது நேரம் மின்சாரம் இல்லாமல் போனால் கூட பேன் ஓடாமல் வியர்வை ஊற்றெடுத்துவிடும்.

இந்நிலையில் தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில் நேற்று காலை முதலே வெயில் சுட்டெரித்தது. பின்னர் மாலையில் மேகம் சூழ்ந்து சாரல் காற்று வீசியது. தொடர்ந்து மாலை 5 மணியளவில் மின்னல், இடிஇடித்தது. இதைத் தொடர்ந்து பிராட்டியூர், ராம்ஜிநகர், மணிகண்டம், அருவாக்குடி, நவல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் முதலில் தூரலாக ஆரம்பித்த மழை பின்னர் அதிகமாக பெய்தது. கடந்த சில தினங்களாக சுட்டெரித்த வெயிலால் அவதியுற்ற மக்கள் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த தீடீர் மழையால் இருச்சக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி வாகனத்தை  ஓட்டிச்சென்றனர். அதேபோல் பஸ் பயணிகளும் குடையில்லாமல் வந்ததால் மழையில்  நனைந்து அவதிபட்டனர். முன்னெச்சரிக்கையாக குடை வைத்திருந்தவர்கள் மட்டும்  குடை பிடித்தபடி சென்றனர். பெரும்பாலோனர் நனைந்தபடி சென்றனர். இருப்பினும்,  கோடை வெயிலுக்கு இதமளிக்கும் வகையில் பெய்த இந்த கோடை மழையால் மக்கள்  ஓரளவு வெப்பம் தணிந்து மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் கொசுக்கடிக்கு  வழக்கம்போல் பஞ்சம் ஏதுமில்லை.
திருச்சி புறநகரில் பகுதிகளில் மட்டும் மழை பெய்தது. நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் மழை பெய்யும் என கோடை வெயிலால் அவதிபட்ட மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.


Tags : suburbs ,sky ,Trichy ,city ,
× RELATED சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு: தாழையூத்தில் இன்று முழு கடையடைப்பு