×

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்ைத உடனடியாக கைவிட வேண்டும் திருவாரூர் இந்திய கம்யூ. வலியுறுத்தல்

திருவாரூர், ஏப். 23: காவிரி டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை  உடனடியாக கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அதன் திருவாரூர் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது,தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம்  சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டு அதன்படி இதற்கான ஏலம் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. அவ்வாறு  ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுத்தால் காவிரி டெல்டா மாவட்டத்தில் உள்ள விளை நிலங்கள் மற்றும் வாழ்வாதாரம் அனைத்தும் முற்றிலும் பாதிக்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.தமிழகத்திலுள்ள 3 இடங்களில் இரு இடங்களை வேதாந்தா நிறுவனம் ஏலம்  எடுத்துள்ள நிலையில் இந்த  எதிர்ப்பு காரணமாக தற்போது கடல் பகுதியில் மட்டும் ஏலம் விடப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு இருக்காது என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் அப்போது கூறியிருந்தார். அந்த விவகாரம் ஓரளவு ஓய்ந்திருந்த நிலையில் அதன்பின்னர் 2வது முறையாக மார்ச் 12ம் தேதி வரை அதற்காக விண்ணப்பிக்கலாம் என்ற ஒரு அறிவிப்பினை வெளியிட்ட நிலையில் திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் முதல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை சுமார் 244 சதுர கிமீ அளவில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கு  அனுமதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு  திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்து வீதியில் நிற்கும் விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் மேலும் வேதனையை ஏற்படுத்த கூடியதாக உள்ளது.

வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள  இரு உரிமங்களின்படி 247 இடங்களில் ஆய்வு நடத்த அனுமதி அளிக்கப்படவுள்ளது. 20 ஆண்டிற்கும் மேலாக தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையால் அந்தப் பகுதி மக்களின் உடல் நலமும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டதால் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி பொதுமக்கள் 13 பேரின் உயிர் பலிக்கு காரணமான  வேதாந்தா குழுமத்திற்கு தமிழ்நாட்டில் 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் தொடர்ந்து போராடி வருகின்ற நிலையில், பாராளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வோம் என்று அறிவித்துள்ள நிலையில் காவிரி டெல்டா மாவட்டத்தையும், தமிழக விவசாயிகளையும் பாதுகாத்திட   ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டு கொள்கிறோம். இவ்வாறு சிவபுண்ணியம் தெரிவித்துள்ளார்.

Tags : Tiruvarur ,delta districts ,
× RELATED தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள...