இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு எதிரொலி முத்துப்பேட்டை கடலோர பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

முத்துப்பேட்டை, ஏப். 23: இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து முத்துப்பேட்டை கடலோர பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கடலோரப்பகுதியில் இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முத்துப்பேட்டை கடலோர பகுதியில் ஆசியாவின் மிகப்பெரிய அலையாத்திக்காடு உள்ளது. சுற்றுலா தலமாகவும் உள்ளது. தற்போது குரங்கணி தீ விபத்துக்கு பிறகும் சுற்றுலா பயணிகள் செல்வதை வனத்துறை தடை செய்து வைத்துள்ளது. ஆனால் மீனவர்கள் அங்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இப்பகுதியை தாக்கிய கஜா புயலின் கோரதாண்டவத்திற்கு பிறகு இப்பகுதியில் சொர்க்கமாக  இருந்த அலையாத்தி மரங்கள் அடியோடு சாய்ந்து சின்னாபின்னமாகி அலையாத்திக்காடு முற்றிலும் அழிந்து விட்டது.

அவை மீண்டும் பழைய நிலைக்கு வர சுமார் 20ஆண்டுகள் ஆகலாம் என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அலையாத்திக்காட்டிலிருந்து ஒரு மணிநேரத்தில் செல்லும் தொலைவில் இலங்கை உள்ளது. ஒருகாலத்தில் இலங்கையிலிருந்து முத்துப்பேட்டை பகுதிக்கு கடல் வழியாக விடுதலை புலிகள் அதிகளவில் வந்து சென்றனர். இதனை பயன்படுத்தி அப்போதைக்கு கடல்வழியாக கள்ளக்கடத்தல் தொழிலும் இப்பகுதியில் கொடிக்கட்டி பறந்தது. பின்னர் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலைக்கு பிறகு தமிழ்நாட்டில் விடுதலை புலிகளுக்கு தடை விதித்ததும் இங்கு வருவதை விடுதலை புலிகள் தவிர்த்தனர். இருந்தும் இவ்வழியாக அவர்கள் ஊடுருவ வாய்ப்புகள் உள்ளதா என்று அன்று முதல்  கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தும் இவ்வழியாக தங்கம், கஞ்சா போன்ற பொருட்கள் கடத்தப்பட்டு வருவது ரகசியமாக நடந்து வருகிறது. இதில் பலமுறை பலர் போலீசாரிடம் சிக்கியும் உள்ளனர். இதனால் இப்பகுதியில் இந்திய நாட்டின் எல்லை பாதுகாப்பு பலமில்லாமல் ஆபத்தான நிலையில்  உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில்    இலங்கையில் சர்ச், நட்சத்திர ஓட்டல்களில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பில் 200க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இதையடுத்து குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையில் முந்தைய காலத்தில் நடந்தது போல குண்டுவெடிப்புகளில் சம்பந்தப்பட்டவர்கள் தமிழக கடல்பகுதி வழியாக தப்பிச்செல்ல வாய்ப்புள்ளதாக வந்த தகவலையடுத்து தமிழக கடலோர பகுதி முழுவதும் கடலோர காவல் படையினரது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.மேலும் திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை கடலோர பகுதி முழுக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதில் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள தில்லைவிளாகம், கோபாலசமுத்திரம், பேட்டை, தம்பிக்கோட்டை செக்போஸ்ட்களில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதேபோல் கடலோரத்தில் உள்ள 24 மீனவ கிராமங்களிலும் சந்தேக நபர்கள் நடமாட்டம், சந்தேக படகுகள் குறித்து தகவலளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலோர பகுதியில் உள்ள 10 முக்கிய கிராமங்களில் அந்நிய நபர்கள் நடமாட்டம் உள்ளதா என முத்துப்பேட்டை பகுதி கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், ஏட்டு வெற்றி  மற்றும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.இது குறித்து மாவட்ட எஸ்பி துரையிடம் கேட்டபோது, இலங்கை சம்பவத்தை தொடர்ந்து தமிழக கடல்பகுதி கண்காணிக்கப்பட்டு வருகிறது. முத்துப்பேட்டை கடலோர பகுதி மற்றும் கிராமங்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்தார்.

Tags : Sri Lanka ,area ,Muthupettai ,
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற 661 கிலோ கஞ்சா பறிமுதல்