×

144 தடை உத்தரவு பிறப்பித்த ஆர்டிஓ காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் கூடுதல் முதன்மை செயலாளர் உத்தரவு

புதுக்கோட்டை, ஏப்.23: ஒரு சமூகத்தை குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறாக தகவல் பரப்பியவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கடந்த 18ம் தேதி இரவு முதல் அந்த பகுதி மக்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.19ம் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. காவல் நிலையத்தின் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவத்தில் 3 போலீசார் காயமடைந்தனர். மேலும் 5 போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து கடந்த 19ம் தேதி பொன்னமராவதி மற்றும் அதனை சுற்றிய 49 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து இலுப்பூர் ஆர்டிஓ சிவதாஸ் உத்தரவிட்டார்.இந்நிலையில் 3 நாட்களுக்கு அவர் பிறப்பித்த உத்தரவு பொன்னமராவதியில் அமைதியான சூழல் ஏற்பட்டதையடுத்து நேற்றுடன் அப்பகுதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடைஉத்தரவு முடிவடைந்தது.இந்நிலையில் இலுப்பூர் ஆர்டிஓவும் தேர்தல் நடத்தும் உதவி அலுவலருமான சிவதாசை பணியிட மாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைக்க தேர்தல் ஆணையம் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு கூடுதல் முதன்மை செயலாளர் அதுல்யா மிஷ்ரா உத்தரவு பிறப்பித்துள்ளார் .

இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்தபோது, தேர்தல் நடைமுறைகள் அமலில் இருப்பதால் பொன்னமராவதி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்தபோது தேர்தல் ஆணையத்திடம் உரிய அனுமதிபெற்று அறிவித்திருக்க வேண்டும் என்றும், அதுமட்டுமின்றி கலவர சம்பவத்தை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்தபோது அதற்கு உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை.அதனாலே அவர் பணிமாற்றம் செய்யப்பட்டார் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Tags : Principal Secretary ,RTO ,
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...