×

3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது நெய்தலூர் - சேப்ளாபட்டி சாலை சீரமைக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

தோகைமலை,ஏப். 23: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நெய்தலூர் ஊராட்சியில் உள்ள நெய்தலூர் பகுதியை சுற்றி 30 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. நெய்தலூர் பகுதியில் இருந்து சேப்ளாப்பட்டி, வியாழன்மேடு, புலியூர் வழியாக திருச்சி பகுதிக்கு முக்கிய சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக செல்லும் பேருந்துகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மூலம் திருச்சி பகுதிக்கு இப்பகுதியினர் சென்று வருகின்றனர். மேலும் விவசாயம் மிகுந்த பகுதியாக இப்பகுதி இருப்பதால் நெய்தலூர் திருச்சி சாலையில் எப்போது வாகனப்போக்குவரத்து அதிகமாக இருக்கும் .நெய்தலூர் திருச்சி சாலை அமைத்து 7 ஆண்டுகளுக்கும் மேல்  ஆகிறது.  ஜல்லிகற்கள் பெயர்ந்து இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் செல்வதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சேப்ளாப்பட்டியில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு சென்று வரவும் நோயாளிகள் மற்றும் முதியவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.நெய்தலூர் திருச்சி சாலையை சரி செய்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சாலையை அகலப்படுத்தி புதிய தார்சாலை அமைப்பதற்கு பணிகள் தொடங்கப்பட்டது. இதில் வியாழன் மேடு முதல் புலியூர்  வரை உள்ள திருச்சி மாவட்ட எல்லைக்குள் உள்ள சாலையை தார் அமைத்து சரிசெய்து விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் நெய்தலூரில் இருந்து வியாழன் மேடு வரை உள்ள கரூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட சாலையை சரிசெய்ய பணிகள் தொடங்கபட்டு பணிகளை சரிசெய்யாமல் பாதியிலேயே விட்டுள்ளனர். அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் சாலையில் உள்ள ஜல்லி கற்களை வெட்டிப்போட்டு ஆங்காங்கே குண்டும் குழியுமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேல் சாலையை சரிசெய்யாமல் அப்படியே உள்ளது. தொடர்ந்து நெய்தலூர் திருச்சி சாலையை சரி செய்யப்படவில்லையெனில் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.  ஆகவே நெய்தலூர் ஊராட்சி நெய்தலூரில் இருந்து சேப்ளாப்பட்டி வழியாக திருச்சி செல்லும் சாலையை சரி செய்து புதிய தார்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags : road ,Neydalur-Chelapatti ,
× RELATED திருச்சி – சிதம்பரம் சாலை பூவளூரில்...