×

திருவள்ளூர் நகராட்சியில் உரக்கிடங்கான பூங்காக்கள்: நடைபயிற்சி செய்ய முடியாமல் முதியவர்கள் அவதி

திருவள்ளூர், ஏப் 23: திருவள்ளூர் நகராட்சியில் இருந்தும், இல்லாத நிலையில் காணப்படும் பூங்காக்களால், பொழுது போக்க இடமில்லாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர். திருவள்ளூர் நகராட்சி 27 வார்டுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. இங்கு, 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மாவட்ட தலைநகரான இங்கு, கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், தீயணைப்பு நிலையம், சார் பதிவாளர் அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. பெரும்பாலும், உழைக்கும் தொழிலாளர்கள் அதிகளவில் வசிக்கும் திருவள்ளூர் நகரில், பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் இளைப்பாறவும், சிறுவர்கள் விளையாடவும் பெரியகுப்பம் பழைய என்.ஜி.ஓ., காலனி, நேதாஜி சாலை உட்பட சில பகுதிகளில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த பூங்காக்கள், தற்போது முறையாக பராமரிக்கப்படாத நிலையில் காணப்படுகிறது. இவற்றில் உள்ள குழந்தைகளுக்கான சறுக்கு மேடைகள், ஊஞ்சல்கள் ஆகியவை சேதமடைந்துள்ளன. இளைஞர்களுக்கான உடற்பயிற்சி கருவிகளும் கிடையாது. முள்வேலிச்செடிகள் முளைத்தும் பரிதாப நிலையில் பூங்காக்கள் உள்ளன. பொழுது போக்கிற்காக அமைக்கப்பட்ட பூங்காக்களில் நீர்தேக்க தொட்டி, நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வந்து செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால், இயற்கையான காற்று, அமைதியான சூழலை விரும்பி, பூங்காக்களுக்கு செல்பவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.

மேலும், 27 வார்டுகளிலும் பூங்காக்கள் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில், குப்பைகளை சேகரித்து, மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த உரக்கிடங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.ல பூங்கா இடங்களில் அங்கன்வாடி மையம், நகர்ப்புற தாய், சேய் நல விடுதி கட்டப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் தற்போது பராமரிப்பில்லாமல், திறந்தவெளி பாராக பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். பூங்கா இடங்களை முறையாக பராமரித்து, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘’திருவள்ளூரில் பூங்காக்கள் இருக்கு, ஆனால் இல்லை என்ற நிலையிலே உள்ளன.

பல பூங்காக்கள் நீரேற்று நிலையமாக மாற்றப்பட்டு, மேல்நிலை குடிநீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு உள்ளது. பழைய என்.ஜி.ஓ., காலனி பூங்காவில், மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ள போதும், யாரும் பராமரிக்காததால், தற்போது திறந்தவெளி பாராக, சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது. இங்கு ஆடுகள், மாடுகள் தான் ஓய்வெடுக்கின்றன. திருவள்ளூரில் பொதுமக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் பலர், காலை, மாலை நேரங்களில் பூங்காக்களுக்கு வந்து விளையாடுவது வழக்கம். கொஞ்சம் கொஞ்சமாக, பூங்காக்கள், எந்த காரணத்திற்காக அமைக்கப்பட்டனவோ, அந்த நோக்கம் மாறி, குடிநீர் தொட்டி கட்டவும், குப்பைகளை கொட்டி உரக்கிடங்கு அமைக்கும் இடமாகவும் மாற்றப்பட்டு விட்டன. எனவே, முதியவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் பயன்படுத்தும் வகையில், திருவள்ளூர் நகராட்சியில் புதியதாக பூங்காக்கள் அமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.

Tags : Frozen Parks ,Tiruvallur Municipality ,
× RELATED மது பாட்டில்களை மொத்த விற்பனை...