×

பெரும்புதூர் தாலுகா அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம் புரோக்கர்கள் பிடியில் ஆதார் சேவை மையம்: மாதக்கணக்கில் இழுத்தடிக்கப்படும் மக்கள்

பெரும்புதூர். ஏப்.23: ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில், லஞ்சம் வாங்குவது தலைவிரித்தாடுவதாகவும், புரோக்கர்கள் பிடியில் ஆதார் சேவை மையம் செயல்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. லஞ்சம் கொடுக்காவிட்டால், பொதுமக்களை மாதக் கணக்கில் இழுத்தடிப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
பெரும்புதூர் தாலுகாவில் அடங்கிய ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய ஒன்றியங்களில் ஸ்ரீபெரும்புதூர், வல்லம், சுங்குவார்சத்திரம், மதுரமங்கலம், தண்டலம், படப்பை, செரப்பணஞ்சேரி ஆகிய 7 குறுவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் அடங்கியுள்ளன.

மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், புதிய ஆதார் அட்டை, பெயர் சேர்த்தல், திருத்தம், செல்நம்பர் இணைப்பு, முகவரி மாற்றம் உள்பட பல்வேறு பணிகளுக்கு ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்தில் விண்ணப்பிக்கின்றனர். இந்த ஆதார் சேவை மையத்தில் 2 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். தற்போது ஸ்ரீபெரும்புதூர் ஆதார் சேவை மையம் புரோக்கர்கள் பிடியில் சிக்கி உள்ளதாகவும், பணம் கொடுக்காதவர்களின் விண்ணப்பங்கள் மாதக்கணக்கில் இழுத்தடிப்பு செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. மேலும் மையத்திற்கு வரும் பொதுமக்களிடம், ஊழியர்கள் அவதூறான வார்த்தைகளால் வசைபாடுவதாக புகாா் எழுந்துள்ளது.

இதுகுறித்து பொது மக்கள் கூறியதாவது, ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆதார் அட்டை சம்பந்தமான குறைபாடுகள் சரி செய்ய ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்தை நாடி வருகின்றனர். பொது மக்கள் நேரடியாக சென்று விண்ணபித்தால், குறிப்பிட்ட தேதியில் மீண்டும் வரும்படி கூறி அனுப்புகின்றனர். ஆனால் அதே பகுதியில் சுற்றி திரியும் புரோக்கர்கள் மூலம் சென்றால், ஓரிரு நாட்களில் ஆதார் அட்டை குளறுபடிகளுக்கு தீர்வு கிடைக்கிறது.

இதனால் பொது மக்கள் புரோக்கர்களை தேடி அலைகின்றனர். இதனை தட்டிக் கேட்கும் பொது மக்களிடம், ஊழியர்கள் அவதூறான வார்த்தைகளால் பேசுகின்றனர். இதனால் பொது மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஆதார் மையத்தை சுற்றி 20க்கும் மேற்பட்ட புரோக்கர்கள் வலம் வருகின்றனர்.
எனவே ஆதார் சேவை மையத்தில் உள்ள ஊழியர்களை மாற்ற வேண்டும். புரோக்கர்கள் அட்டகாசத்தை ஒழிக்க வேண்டும் என்றனர்.

Tags : Bribery Brokers ,Perambudur Taluk Office ,Grip Adhar Service Center ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...