×

நெல்லை- சாத்தான்குளம் விரைவு பஸ் அடிக்கடி மாயம்

சாத்தான்குளம்: நெல்லையில் இருந்து வைகுண்டம், ஆழ்வார்திருநகரி, நாசரேத், ஆனந்தபுரம் வழியாக சாத்தான்குளத்துக்கு எஸ்எப்எஸ்  அரசு விரைவு பஸ்  இயக்கப்பட்டு வருகிறது. இந்த  பஸ் காலை, மதியம், மாலை , இரவு என 4முறை சாத்தான்குளம் வந்து செல்கிறது. இந்த பஸ் மூலம்  பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளும் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். இந்த வழித்தடத்தில் பேருந்து இயக்கப்படுவதால் நல்ல வருவாயும் ஏற்படுகிறது. ஆனால் இந்த விரைவு பஸ் கடந்த 2மாதமாக  முறையாக இயக்கப்படவில்லை. சில நேரம் தொடர்ந்து  இயக்கப்படுகிறது. சில நாள்கள் இந்த பஸ் இந்த வழித்தடத்துக்கு வருவதில்லை. இதனால் நாசரேத், ஆழ்வார்திருநகரி பகுதிக்கு செல்லும் பொதுமக்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து நெல்லை போக்குவரத்து கழக அலுவலகத்தில் கேட்டபோது  போதிய பஸ் இல்லாததால்  சில நேரம் இயக்கப்படாமல் உள்ளது என மலுப்பலான பதில் அளிக்கின்றனர். இதுகுறித்து பயணி கூறுகையில், ‘சாத்தான்குளம் போக்குவரத்து பணிமனைக்கு போதிய பேருந்து ஒதுக்காமல் அதனை முடக்கி விட்டனர். மேலும் இப்பகுதிக்கு பேய்க்குளம், நாசரேத் வழித்தடத்தில் புதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை. பழைய பேருந்துகளை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது சாத்தான்குளம் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளை வேண்டுமென்று நிறுத்தி விடுகின்றனர்’ என்றார்.  எனவே   கலெக்டர்  மற்றும் உயர் அதிகாரிகள் நெல்லையில் இருந்து சாத்தான்குளம், நாசரேத்துக்கு இயக்கப்படும் விரைவு பேருந்தை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED புளியங்குளத்தில் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் வாக்களிப்பு