×

தூத்துக்குடி இரட்டை கொலையில் 4 ஆண்டுக்கு பின்னர் நிதி நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேர் கைது பரபரப்பு தகவல்கள்

தூத்துக்குடி,ஏப்.23: தூத்துக்குடி, ஆத்தூரில் நடந்த இரட்டை கொலைகளில் 4 ஆண்டுகளுக்கு பின் நிதி நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல் அம்பலமாகியுள்ளது.
 தூத்துக்குடி தாளமுத்துநகரை சேர்ந்தவர் செல்லதுரை மகன் ராஜகணேசன்(28). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் டிரைவராக இருந்தார். அதே வளாகத்தில் பணிபுரிந்து வந்த பிரையன்ட் நகரை சேர்ந்த அருணாதேவி(32) என்பவருடன் பழக்கமாகி இருவரும் கடந்த 2014 ஆண்டு முதல் சேர்ந்து வசித்து வந்தனர்.   இந்நிலையில் கடந்த 4.6.2016ல் ஆத்தூர் பழையகாயல் காட்டுபகுதியில் ராஜகணேசன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதற்கு மறுநாள் அவருடன் சேர்ந்து வசித்த அருணாதேவி தூத்துக்குடி கால்டுவெல் காலனி காட்டு பகுதியில் கழுத்து நெரித்து கொல்லப்பட்டு, உடல் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். அப்போது அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இந்த கொலை சம்பவங்கள் தொடர்பாக ஆத்தூர் மற்றும் தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

 இந்நிலையில் தனிப்படை எஸ்ஐ ஜீவமணி தர்மராஜ் தலைமையில் ஏட்டு திருமணி, போலீசார் ராஜா, பாலமுருகன், திருமணி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் கொலையில் ஈடுபட்டது சூரங்குடி அருகேயுள்ள தங்கம்மாள்புரத்தை சேர்ந்த உமையபாண்டி(48) என்பது தெரியவந்தது. அவரை தனிப்படையினர் கைது செய்து நடத்திய விசாரணையில், கால்டுவெல் காலனியை சேர்ந்த முத்துப்பாண்டி(47) குறுக்குசாலையை சேர்ந்த தங்கதுரை(44) ஆகிய இருவரின் தூண்டுதலின் பேரில் ராஜகணேசனை கடத்திச் சென்று அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.  தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜகணேசன் ஏற்கனவே திருமணமான அருணாதேவியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இது இரு தரப்பு பெற்றோருக்கும் பிடிக்கவில்லை. இதனால் இருவரும் பிரையண்ட்நகரில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் லோடு ஆட்டோ வாங்குவதற்காக ராஜகணேசன் கால்டுவெல் காலனி பைனான்சியர் முத்துப்பாண்டியிடம் 2 லட்சமும், குறுக்குசாலையை சேர்ந்த தங்கதுரை என்பவரிடம் ஒரு லட்சமும் கடனாக பெற்றுள்ளார். ஆனால் அந்த கடனுக்கு அவர்கள் இருவரும் வட்டியுடன் சேர்த்து ரூ. 6 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஒரு கட்டத்தில் கடனை திரும்ப தராததால் ராஜகணேசனை அடித்து உதைத்து பணத்தை கேட்க திட்டமிட்ட அவர்கள் இதற்கு கூலிப்படையாக குறுக்குசாலையை சேர்ந்த உமையபாண்டி(47) என்பவரை அணுகியுள்ளனர். பின்னர் அவர்கள் முருகன் என்ற மற்றொரு ரவுடியுடன் சேர்ந்து முத்துபாண்டியின் காரில் கடந்த 1.6.2015ல் ராஜகணேசனை கடத்திச் சென்று பழையகாயல் பகுதியில் வைத்து அடித்து உதைத்துள்ளனர்.

இதில் அவர் இறந்ததால் உடலை காட்டுப் பகுதியில் வீசிவிட்டு அக்கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது. இதற்கிடையே ராஜகணேசனும், அவருடன் வசித்த அருணாதேவியும் ஒரே செல்போனை பயன்படுத்தியுள்ளனர்.
இதனை வைத்து ராஜகணேசனுக்கு அந்த கும்பலால் ஆபத்து ஏற்பட்டிருக்கும் என கருதி அவர்களிடம் அருணாதேவி கேட்டுள்ளார். இதனால்  தாங்கள் சிக்கி விடக் கூடாது என கருதிய அக்கும்பல் கடந்த 4.6.2015ல் அருணாதேவியை வீட்டில் இருந்து காரில் அழைத்துச் சென்று செல்போனை பறித்து விட்டு கழுத்தை நெரித்துக் கொன்று கால்டுவெல் காலனியில் காட்டுக்குள் உடலை எரித்துவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக தனிப்படையினர் பைனான்சியர் முத்துபாண்டியை கைது செய்து ஆத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். மேலும் தலைமறைவான மற்றொரு பைனான்சியர் தங்கதுரையை தேடி வருகின்றனர். முத்துப்பாண்டியிடம் ஆத்தூர் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேறு வழக்கில் சிறை சென்றவர்கள்   கடந்த 2015ம் ஆண்டு இந்த இரண்டு கொலை சம்பவங்கள் நடந்திருந்தாலும் இதில் கொல்லப்பட்ட ராஜகணேசனுக்கு அந்த நேரத்தில் தான் திருமணம் நிச்சயமாகியுள்ளது. அவர் கொல்லப்பட்டது தெரிந்தும் கூட அவரது பெற்றோர் கொலையாளிகளை கண்டுபிடிப்பதில் அக்கறை காட்டவில்லை. சம்பவத்திற்கு பின்னர் ஒதுங்கி இருந்து விட்டனர். ராஜகணேசனின் நெருங்கிய உறவினரான வாலிபர் ஒருவரை பிடித்து வைத்து விசாரணை நடத்திய போலீசார், அவரிடம் இருந்து செல்போன், 18 ஆயிரம் பணம் ஆகியவற்றை மிரட்டியே கறந்துள்ளனர். மேலும் போலீசார் அருணாதேவியின் குடும்பத்தினர் கவுரவத்திற்காக இதனை செய்திருக்கலாமோ என்று கருதி அவரது குடும்பத்தினர், உறவினர்களை பிடித்து வந்து அடித்து உதைத்துள்ளனர். ஆனால் எதிர்பாராத சம்பவமாக அவர்கள் கூலிப்படையால் கொல்லப்பட்டது தற்போது தான் அம்பலமாகியுள்ளது.  இதில் கைது செய்யப்பட்டுள்ள உமையபாண்டி மீது மற்றொரு கொலை வழக்கும் தென்பாகம் காவல் நிலையத்தில் உள்ளது. முத்துப்பாண்டி மீது அடிதடி வழக்கும், ஜாதிபெயரை சொல்லி திட்டி தாக்கிய வழக்கும் உள்ளது. இருவருமே அடுத்தடுத்து வேறு வழக்குகளில் சிறைக்கு சென்றுவிட்டதால் போலீசாரின் கவனம் இவர்கள் மீது திரும்பவில்லை.

Tags : Tutucci ,twin killings ,institution ,owner ,
× RELATED நியோமேக்ஸ் வழக்கு: போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு