×

மாநகராட்சி கைவிட்டதால் திட்ட மதிப்பீட்டோடு நின்ற ஸ்கேட்டிங் தளம்

மதுரை, ஏப்.23: மதுரை மாநகராட்சி கைவிட்டதால் அமைய இருந்த ஸ்கேட்டிங் தளம் திட்டமதிப்பீட்டோடு நின்று போனது.மதுரையில் தற்போது ஸ்கேட்டிங் விளையாட்டு பிரபலமாகி வருகிறது. இதற்கு தேவையான சிமெண்ட் தளமோ மிகக்குறைந்த அளவில் உள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த இவ்விளையாட்டிற்கான தளம் அமைக்க செலவும் அதிகமாகும். தற்போது கேகே நகர் பகுதியில் வண்டியூர் கண்மாய்க்கரையில் ஸ்கேட்டிங் தளம் அமைந்துள்ளது. இங்கு போட்டிகள் அதிகளவில் நடந்து வருகின்றன.இந்நிலையில் மதுரை தங்கராஜ் சாலையில் மாநகராட்சி நவீன உடற்பயிற்சி கூடம், மாநகராட்சி நீச்சல் குளத்தில் நவீன முறையில் மராமத்து பணிகள் செய்யப்பட்டன. இக்குளத்திற்கு அருகில் உள்ள காலியிடத்தில் மாநகராட்சி சார்பில் ஸ்கேட்டிங் தளம் அமைப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஸ்கேட்டிங் தளம் அமைப்பதற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. அதற்கு அடுத்தக்கட்டத்திற்கு இத்திட்டம் செல்லவில்லை. தற்போது இத்திட்டத்தை மாநகராட்சி திடீரென கைவிட்டிருக்கிறது. மதிப்பீடோடு இத்திட்டம் நின்று போய்விட்டது.இதுகுறித்து மதுரை வீரர், வீராங்கைனைகள் தரப்பில் கூறும்போது, ‘‘மதுரை மாநகராட்சி நீச்சல் குளம் அருகாமைப் பகுதியில் ஸ்கேட்டிங் தளம் அமைந்தால் மாவட்டத்தின் அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். எனவே மறு முயற்சியில் ஆய்வு செய்து, தளம் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்’’ என்று வேதனை தெரிவித்தனர்.

Tags : Corporation ,
× RELATED ஈரோடு மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை