×

விலங்குகள் இடம்பெயர்வதை தடுக்க வனத்தில் வேட்டைத்தடுப்பு முகாம்

பொள்ளாச்சி, ஏப். 22: பொள்ளாச்சியை அடுத்த அடர்ந்த வனப்பகுதிகளில், விலங்குகள் இடம்பெயர்வதை தடுக்க வேட்டைத்தடுப்பு முகாம் அமைக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.  பொள்ளாச்சியை அடுத்த ஆழியார், நவமலை, சர்க்கார்பதி உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகளில் இருந்து யானை, வரையாடு, குரங்கு, மான், காட்டெருமை, காட்டுபன்றி உள்ளிட்ட விலங்குகள் இடம்பெயர்ந்து வருவது அதிகரித்துள்ளது. அதிலும் அடிக்கடி யானைகள் இடம்பெயர்ந்து கிராம பகுதிக்கு வருகிறது.  இதையடுத்து, அடர்ந்த வனத்திலிருந்து யானை உள்ளிட்ட விலங்குகள் இடம்பெயர்ந்து செல்வதை தடுப்பது மட்டுமின்றி சமூகவிரோதிகள் ஊடுருவதை கண்காணிக்க, வேட்டைத்தடுப்பு முகாம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக முதற்கட்டமாக, நவமலையின் ஒருபகுதியில் கடந்த சில மாதத்திற்கு முன்பு சுமார் 15அடி உயரத்துக்கு அப்பால் வேட்டைத்தடுப்பு முகாம் அமைக்கும் பணி துவங்கப்பட்டது.

தற்போது அப்பணி சுமார் 75சதவீதம் நிறைவடைந்துள்ளது. இன்னும் சில வாரத்தில் அப்பணியை முழுமையாக நிறைவு செய்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதுபோல், ஆழியாரிலிருந்து நவமலை செல்லும் வழியில் உள்ள ஆதாளியம்மன் கோயில் அருகே மற்றும் பருத்தியூர் வனத்தைதொட்டு என அடுத்தடுத்து, ரூ.10லட்சம் செலவில் வேட்டைத்தடுப்பு முகாம் அமைக்கப்படுகிறது. இந்த முகாம்களில், தலா 7 வேட்டைத்தடுப்பு காவலர்கள், தினமும் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர். அவர்கள், அப்பகுதியிலிருந்து விலங்குகள் இடம்பெயர்ந்து செல்வதை தடுத்து மீண்டும் அடர்ந்த வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபடுவர். மேலும், மர்மநபர்கள் யாரேனும் ஊடுருவிகின்றார்களா என கண்காணிக்கப்படும் என்று, வனச்சரகர் காசிலிங்கம் தெரிவித்தார்.

Tags : Hunting camp ,forest ,
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...