×

நவமலை வனத்தில் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் காட்டுயானை அட்டகாசம்

பொள்ளாச்சி, ஏப். 22: பொள்ளாச்சி அடுத்த நவமலை வனத்தில், மலைவாழ் மக்கள் குடியிருப்பில் காட்டு யானை புகுந்து, குடிசைகளை இடித்து சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது.  பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அருகே உள்ள நவமலை வனம் அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு அடிக்கடி யானைகள் நடமாட்டம் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில், அப்பகுதியில் உள்ள மாந்தோப்புக்கு 20வயது மதிக்கத்தக்க  ஒற்றை ஆண் யானை ஒன்று வந்தது. மாங்காய்களை ருசி கண்ட யானை, மலைவாழ் மக்கள் குடியிருப்பு நோக்கி நகர்ந்தது.
 பின் அங்குள்ள ஒருவீட்டின் கதவை அந்த யானை தட்டியுள்ளது.

அப்போது வீட்டிலிருந்த தம்பதியினர் யானை நிற்பதையறிந்து, மற்றொரு வாசல் வழியாக வெளியேறி தப்பியோடினர். அதன்பிறகு அந்த யானை, வீட்டின் சமையலறைக்கு சென்று அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை ருசித்து துவம்சம் செய்ததுடன், வீட்டின் ஒரு பகுதி சுவரை இடித்து தள்ளியது.  அதன்பின் அருகே உள்ள மற்றொரு குடிசை வீட்டின் சுவரையும் சேதப்படுத்திவிட்டு அங்குமிங்குமாக உலாவந்துள்ளது. இதையறிந்த வனச்சரகர் காசிலிங்கம் மற்றும் வனவர் பிரபாகரன் உள்ளிட்ட வனக்குழுவினர், சம்பவ இடத்துக்கு விரைந்து மலைவாழ் மக்கள்  குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த யானையை தீப்பந்தம் மற்றும் பட்டாசு வெடித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.  சுமார் 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு, அந்த யானை ஆழியார் பகுதிக்கு விரட்டப்பட்டது.

Tags : Wildlife resident ,hill station ,forest ,Navamalai ,
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...