×

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஜீப், பைக்கில் போலீஸ் ரோந்து

சேலம், ஏப்.22: சேலம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்கு எண்ணும் மையத்தில் 24மணி நேரமும் ஜீப், பைக்கில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.  தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், கடந்த 18ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில், சேலம் நாடாளுமன்ற தொகுதியில், பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையமான கருப்பூர் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு 6 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக, ஸ்டிராங் ரூம்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இம்மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மத்திய பாதுகாப்பு படையினர் 18 பேரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 60 பேரும், உள்ளூர் போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் 3 ஷிப்ட்கள் முறையில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் தவிர, ஒரு கூடுதல் துணை கமிஷனர், 3 உதவி கமிஷனர்கள், 12 இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் என 300 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஸ்டிராங் ரூம்களில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு, அங்கு பதிவாகும் காட்சிகள் கன்ட்ரோல் ரூமில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றி 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு, ஒரு ஜீப் மற்றும் 2 பைக்குகளில் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து சுற்றி வருகின்றனர். வெடிகுண்டு நிபுணர்களும், 24 மணி நேரம் பணி அமர்த்தப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : center ,
× RELATED தொழில் மையத்தில் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கான கருத்தரங்கு