×

கட்டுப்பாட்டு அறையுடன் வங்கிகள் இணைப்பு

கோவை, ஏப்.22: கோவை நகரில் போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் வங்கி, மருத்துவமனைகளை இணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை நகரில் நகை பறிப்பு, பிக்பாக்கெட், வழிப்பறி அதிகமாகி விட்டது. வீதிக்கு ஒரு கேமரா கட்டாயம் தேவை என்ற திட்டத்தை செயலாக்க நகர போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். வணிக பகுதியில் குறிப்பாக ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, பெரிய கடை வீதி, தியாகி குமரன் வீதி, கிராஸ்கட் ரோடு, டி.பி ரோடு, 100 அடி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வியாபார கடைகளில் கண்காணிப்பு கேமரா அமைக்கவேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் 75 சதவீதம் கடைகளில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அடுக்குமாடிகளை கணக்கெடுத்து அங்கே கண்காணிப்பு கேமரா அமைக்க போலீசார் வலியுறுத்தி வருகின்றனர்.

விடுமுறை மற்றும் விசேஷ நிகழ்ச்சிக்காக பொதுமக்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விடுகிறார்கள். வீட்டில் யாருமில்லாத நேரத்தில் திருடர்கள் வீட்டிற்குள் புகுந்து கைவரிசை காட்டுகிறார்கள். 90 சதவீத திருட்டுகள் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் நடப்பதாகவும், 70 சதவீத திருட்டுகள் இரவு நேரத்தில் நடப்பதாகவும் தெரியவந்துள்ளது. கண்காணிப்பு கேமரா இருந்தால் மட்டுமே  குற்றவாளிகளை எளிதாக பிடிக்க முடியும். கைரேகை, மோப்ப நாய், தடயம் மூலமாக குற்றவாளிகளை பிடிப்பதில் சாத்தியம் குறைவாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து நகரில் அபார்ட்மென்ட்களில் குடியிருப்பு சங்கங்களின் உதவியுடன் ேகமரா அமைக்கும் பணி நடக்கிறது. நகரில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அபார்ட்மென்ட் அமைந்துள்ளது. அனைத்து அபார்ட்மென்டுகளிலும் கேமரா பொருத்தப்பட்டு அந்தந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் கண்காணிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். தற்போது கோவை நகரில் 150க்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன.

இந்த வங்கிகளில் கண்காணிப்பு கேமரா உள்ளது. வங்கிகளில் அமைந்துள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைத்து கண்காணிக்கும் பணி துவங்கியுள்ளது. முதல் கட்டமாக 50 வங்கிகளின் கண்காணிப்பு கேமராக்கள் கட்டுபாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் பணம் எடுக்க, டெபாசிட் செய்ய வருபவர்கள், ஏடிஎம் முன் கூட்டமாக நிற்பவர்களையும் இந்த கேமராவில் கண்காணிக்க முடியும். வங்கிகளுக்குள் நடக்கும் செயல்பாடுகளை போலீசார் தினமும் கண்காணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் அரசு மருத்துவமனை மற்றும் சில தனியார் மருத்துவமனைகளும் கட்டுப்பாட்டு அறையின் கண்காணிப்பு எல்லைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சிக்னல், அபார்ட்மென்ட், வங்கி, மருத்துவமனை, வணிக வீதிகளை போலீஸ் கண்காணிப்பு எல்லையில் கொண்டு வந்து 24 மணி நேரம் கண்காணிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Tags : banks ,
× RELATED வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்