×

மக்களின் ஜீவாதாரமாக உள்ள வெண்ணாறும், கோரையாறும் கோடையிலாவது தூர்வாரப்படுமா? கூத்தாநல்லூர் விவசாயிகள் எதிர்பார்ப்பு

கூத்தாநல்லூர், ஏப்.22: கூத்தாநல்லூர் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் ஜீவாதாரமாக விளங்கும் வெண்ணாறு மற்றும் கோரையாறு ஆகியவற்றை இந்த கோடையில் தூர்வார வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர் மையப்பகுதியில் ஊருக்கே பெருமை சேர்க்கும்படி ஓடும் காவிரியாற்றின் கிளை நதியான வெண்ணாறு ஒரு காலத்தில் சோழர்களின் நீர்வழிப்போக்கு வரத்தாக இருந்தது. அதேபோல கூத்தாநல்லூரை சுற்றி பாதுகாப்பு அரண்போல ஓடும் கோரையாறு உள்ளது. இதுகுறித்து விவசாயிகளும் சமூகஆர்வலர்களும் கூறியதாவது: கூத்தாநல்லூர் தாலுகாவில் உள்ள 55 கிராமங்கள் வெண்ணாறு, கோரையாற்று பாசனத்தை மட்டுமே விவசாயத்திற்கும் குடிநீருக்கும் நம்பி இருக்கிறது. ஒருநேரத்தில் சம்பா, குறுவை, தாளடி என முப்போகம் விளைந்த  நிலங்கள் தற்போது ஒருபோகம் மட்டுமே விளையும் பூமியாக மாறியிருக்கிறது. கூத்தாநல்லூரை சுற்றி கோடைக்கால பணப்பயிரான பருத்தி பெரும் பகுதிகளில் பயிரிடப்பட்டு வந்த நிலையில், நிலத்தடி நீர் அதளபாதளத்திற்கு போய்விட்டதால் போர்வெல் மூலம் பாசனம் செய்ய வேண்டிய பருத்தியும் குறைவான நிலங்களிலேயே தான் தற்போது பயிரிடப்பட்டு வருகிறது. இதனால் விவசாய பணிகளில் காலங்காலமாக ஈடுபட்டுவந்த விவசாயிகளின் சந்ததிகள் பலர், நகர பகுதிகளுக்கு வேறு வேலைதேடி சென்று விட்டனர். கால்நடைகளுக்கும் இந்த வெண்ணாறும்,  கோரையாறுமே தான் ஜீவாதாரம். இதற்கு காரணம் வெண்ணாறும், கோரையாறும் தன்னுடைய பரப்பளவிலும், கொள்ளளவிலும் சுருங்கிப்போனதே ஆகும்.  கடந்த 7 ஆண்டுகளாக இரண்டுஆறுகளிலுமே தூர் வாரும் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கூத்தாநல்லூர் விவசாயிகள் மட்டுமின்றி நகரப்பகுதி மக்களுக்கும் ஒரே நீராதாரமாக விளங்கிய இவ்விரண்டு ஆறுகளுமே இன்றைக்கு எதற்கும் பயன்படாதவகையில் கிடக்கிறது.

ஏற்கனவே தூர்வாராததாலும் , மணல் எடுக்கப்பட்டதாலும் தன்னுடைய அடையாளத்தை இழந்து தனது பரப்பளவில் பெரும்பகுதியில் அமலைச்செடிகளையும், வெங்காயத்தாமரையையும், கோரைப்புற்களையும் சுமந்து நிற்கும் வெண்ணாறும், கோரையாறும் கடந்தாண்டு வீசிய கஜாபுயலின் கோரத்தாண்டவத்தில் விழுந்த மரங்களால் நிறைந்து கிடக்கிறது. இந்த நிலை இப்படியே தொடருமானால் ஏற்கனவே ஓடையாக மாறியிருக்கும் இரண்டு ஆறுகளும் சிறு வாய்க்காலாக மாறிப்போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த நிலையைகருத்தில் கொண்டு பொதுப்பணித்துறை உடனடியாக இந்த கோடையில் வெண்ணாற்றையும், கோரையாற்றையும் முற்றிலுமாக தூர்வாரி கரையை பலப்படுத்தி அத்தியாவசிய நீர் தேவைக்கும் பயன்படும் வகையில் முறைப்படுத்தி தரவேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Tags : vale ,Koothanallur ,
× RELATED கோரையாற்றங்கரையில் பனை விதைகள் நடும் விழா