×

இறப்புக்கு காரணமான கணவனை கைது செய்ய கோரி பெண்ணின் உடலை வாங்க மறுத்து பெற்றோர், உறவினர்கள் போராட்டம் புதுகை அரசு மருத்துவமனையில் பரபரப்பு

புதுக்கோட்டை, ஏப்.22: இறப்புக்கு காரணமான கணவனை கைது செய்ய கோரி இறந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள்  புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது.  புதுக்கோட்டை கீழ நான்காம் வீதியை சேர்ந்தவர்  மணிகண்டன். இவரது மகள் நிவேதா பிரியதர்ஷினி(23). இவருக்கும்  ராமேஸ்வரத்தை சேர்ந்த விஜய் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு  திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு மிதுன் என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில்  திருமணம் நடைபெற்ற சிறிது நாட்களிலேயே விஜய், மனைவியை  சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. கடந்த 4  மாதங்களுக்கு முன்பு நிவேதாபிரியதர்ஷினி விஷம் குடித்து தூக்கிட்டு  தற்கொலைக்கு முயற்சித்தார் என்று கூறி புதுக்கோட்டையில் உள்ள நிவேதா  பிரியதர்ஷினியின் பெற்றோருக்கு விஜய் தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து  ராமேஸ்வரத்திற்கு சென்ற நிவேதாபிரியதர்ஷினியின் பெற்றோர் சுயநினைவு  இல்லாமல் இருந்த தங்கள் மகளை அங்கிருந்து மீட்டு புதுக்கோட்டை அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்து சிகிச்சை மேற்கொண்டனர். மேலும்  ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் விஜய் மீது நிவேதா பிரியதர்ஷினியின்  பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், அந்தப் புகாருக்கு போலீசார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில்  நிவேதா பிரியதர்ஷினிக்கு கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு மூச்சு குழாய்  அறுவை சிகிச்சையை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  உள்ள மருத்துவர்கள் செய்து உயிர் பிழைக்க வைத்தனர். பின்னர் நிவேதா  பிரியதர்ஷினியிடம் பெற்றோர் உனக்கு என்ன நடந்தது என்று கேட்டு  விசாரிக்கையில், அவரது கணவர் விஜய் தன்னை சந்தேகப்பட்டு கொலை முயற்சியில்  ஈடுபட்டார் என்றும், எனது மகனை என்னிடம் மீட்டுத் தாருங்கள் என்றும் அவரது  பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.  

 இதனையடுத்து நிவேதா பிரியதர்ஷினி  பெற்றோர், 2வயது மகன் மிதுனை கேட்டு ராமேஸ்வரத்திற்கு சென்று  விஜயிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் அவரது மகனை கொடுக்க மறுத்ததாக  கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென்று கடந்த இரு தினங்களுக்கு முன்பு  நிவேதா பிரியதர்ஷினிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து  மீண்டும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் நேற்றைய முன் தினம் சிகிச்சை பலனின்றி  அவர் இறந்தார். பின்னர் நிவேதா பிரியதர்ஷினியின் உடலை உடல்கூறு  ஆய்விற்காக பிரேத பரிசோதனை கூடத்தில் மருத்துவர்கள் அனுமதித்துள்ளனர்.  இந்நிலையில்  உடற்கூறு ஆய்வு நேற்று முடிந்த நிலையில் நிவேதா பிரியதர்ஷினியின்  பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில்  தங்களது பெண்ணை கொடுமை செய்து கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிரிழப்புக்கு  காரணமாக இருந்த அவரது கணவர் விஜய்யை கைது செய்ய வேண்டும். அதற்கு உடந்தையாக  இருந்த விஜய்யின் பெற்றோர் கணேசன்-ஜெயந்தி உள்ளிட்டோரை கைது செய்ய  வேண்டும். நிவேதா பிரியதர்ஷனின் 2வயது மகனை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதுவரை  நாங்கள் தங்களது பெண்ணின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி பிரேத பரிசோதனை  கூடம் வெளியே நின்று கதறி அழுது போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அவரிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Parents ,protesters ,relatives ,
× RELATED தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி...