×

பொன்பரப்பி சம்பவத்தை டிக்-டாக் பதிவு செய்த 2 பேர் கைது

பெரம்பலூர், ஏப்.22: அரியலூர் மாவட்டத்தில் நடந்த சாதி மோதலுக்கு எதிராக பெரம்பலூர் மாவட்டத்தில் பேஸ்புக் மூலம் டிக்-டாக் பதிவிட்ட அசூர் கிராமத்தைச் சேர்ந்த இருவர் மீது குன்னம் போலீசார் வழக்குப் பதிந்து கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த  18ம் தேதி வாக்குப்பதிவன்று அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரின் பகுதிக்குச் சென்று தாக்குதல் நடத்தியது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, அசூர் கிராமம், கிழக்குத் தெருவைச் சேர்ந்த ரங்கராஜ் மகன் உதயகுமார் ( 22) மற்றும் இதே தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ் (21) இருவரும்  அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி சம்பவத்தை வன்முறையைத் தூண்டும் விதமாக பேஸ்புக் மூலம் டிக்-டாக் பதிவிட்டிருந்தனர்.

இது ஒரு பிரிவினரிடையே பலத்த வர வேற்பையும், மற்றொரு தரப்பினர் இடையே கடும் எதிர்ப்பையும் உருவாக்கியுள்ளது. இதனால் மீண்டும் இரு சமூகத்தினரிடையே வன்முறை ஏதும் ஏற்படாதிருக்க, சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுக்கும்படி, அசூர் கிராமத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் மணி மேகலை என்பவர் நேற்று பெரம்பலூர் மாவட்டம், குன்னம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இந்தப் புகார் குறித்து, குன்னம் இன்ஸ்பெக்டர் கதிரவன் விசாரணை நடத்தி செக்சன் 67 ஐடி ஆக்ட் 2008,  செக்சன் 294 பி, செக்சன்  505 பார்ட்-1,  பார்ட்- பி,  505(1) ஆகியப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து, இருவரையும் கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளார். பின்னர் இருவரும் நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குன்னம் தாலுகா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Dig-Doc ,
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது