×

முயல்வேட்டை திருவிழாவுக்கு அனுமதி மறுப்பு போலீசாரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் லாடபுரத்தில் பரபரப்பு: போக்குவரத்து பாதிப்பு

பெரம்பலூர், ஏப்.22:  பெரம்பலூர் அருகே லாடபுரத்தில் முயல்வேட்டை திருவிழாவுக்கு அனுமதி  வழங்காத போலீஸாரைக் கண்டித்து கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் சித்திரை மாதங்களில் முயல்வேட்டை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் நடப்பாண்டும் முயல்வேட்டை திருவிழா நடந்த பொதுமக்கள் ஏற்பாடு செய்தனர்.இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தில் நேற்றுமுன்தினம் முயல் வேட்டை திருவிழா நடத்த இரு பிரிவினர் போலீஸாரிடம் தனித்தனியாக அனுமதி கேட்டனர். அப்பகுதியில் இருபிரிவினரிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டதால் போலீஸார் இரு பிரிவினருக்கும் அனுமதி தரவில்லை என கூறப்படுகிறது.

 ஆனால், இதில் ஒருபிரிவினர் போலீஸாரின் அனுமதியை எதிர்பாராமல் நேற்றுமுன்தினம் இரவு முயல்வேட்டை திருவிழாவுக்கு கிளம்பிச் சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பினர், ஒரு தரப்பினருக்கு மட்டும் போலீஸார் அனுமதி வழங்கியதாக தவறாக புரிந்துக் கொண்டு போலீஸார் பாரபட்சமாக செயல்படுவதாகக் கூறி நேற்று காலை அம்மாபாளையம் பிரிவு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் பெரம்பலூர்-துறையூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : protest ,festival ,
× RELATED அர்ஜெண்டினாவில்...