×

குன்னம் அருகே பஸ் மோதி ஒருவர் பலி மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

பாடாலூர், ஏப்.22: குன்னம் அருகே மேலமாத்தூர் பகுதியில் அரசு பஸ் மோதி ஒருவர் பலியானார். அதே பகுதியில் தொடர்ந்து விபத்து ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க வேண்டும் எனக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆலத்தூர் தாலுகா மேலமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (53).  கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று பைக்கில் மேலமாத்தூர் பஸ் நிறுத்தம் அருகே பெரம்பலூர்- அரியலூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது தஞ்சாவூரில் இருந்து சேலத்திற்கு சென்ற அரசு விரைவு பேருந்து ராஜேந்திரன் மீது மோதியது. இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த மேலமாத்தூர் பொதுமக்கள் இந்த  பகுதியில் தொடர்ந்து அதிகளவில்  விபத்துகள் நடைபெறுவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே,  இப்பகுதியில் வேகத்தடை  அமைக்க வேண்டும் என்று கூறி சுமார்  50 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து  தகவல் அறிந்த குன்னம் போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் கருணாகரன், கிராம நிர்வாக அலுவலர் ரஜினி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் சமாதான  பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட தலைமை  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Tags : Bus collision ,Kunnam ,traffic accidents ,
× RELATED குண்ணம் ஊராட்சியில் தனியார்...