வருவாய்த்துறை சான்றிதழுக்கு 40 கி.மீ பயணம் நரிக்குடி தாலுகா அமைவது எப்போது?

திருச்சுழி, ஏப். 22: நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடையும் வகையில், நரிக்குடியை தனித்தாலுகா அமைவது எப்போது என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். திருச்சுழி தாலுகாவில் உள்ள நரிக்குடி ஒன்றியம், விருதுநகர் மாவட்டத்தின் கடைநிலைப்பகுதியாகவும், மிகவும் பின்தங்கிய பகுதியாகவும் உள்ளது. இந்த ஒன்றியத்தில் 44 ஊராட்சிகளும், 176 கிராமங்களும் உள்ளன. இப்பகுதி கிராமங்கள் அனைத்தும் நரிக்குடியிலிருந்து 25 கி.மீ தூரம் சுற்றளவில் உள்ளன. இப்பகுதி கிராம மக்கள் தங்களுக்கு தேவையான பட்டா மாறுதல், குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு திருச்சுழி தாலுகா அலுவலகம் சென்று வருகின்றனர். எந்த ஒரு பணியாக இருந்தாலும் முடிவதற்கு ஒரு வாரம் அலைய வேண்டியுள்ளது என்கின்றனர். இதனால், கூலித்தொழிலாளர்கள் திருச்சுழி தாலுகா அலுவலகத்திற்கு ஏதாவது சான்றிதழ் வாங்கச் சென்றால், அவர்கள் வேலையையும், பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.

மேலும், கிராமப்புறங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால், 25 கி.மீ தூரமுள்ள நரிக்குடிக்கு வந்து, அங்கிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள திருச்சுழிக்கு செல்கின்றனர். நரிக்குடியில் ஏ.முக்குளம், வீரசோழன், நரிக்குடி ஆகிய பிர்க்காக்கள் உள்ளன. எனவே, நரிக்குடியை தனித்தாலுகாவாக்கினால், கிராமப்புற மக்களுக்கு அலைச்சலும் குறையும். பொருளாதார இழப்பும் குறையும் என்கின்றனர். இது குறித்து நரிக்குடி பகுதியில் உள்ள கட்டனூர் பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் கிராமத்தில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில், திருச்சுழியில் தாலுகா அலுவலகம் உள்ளது. பல்வேறு பணிகளுக்காக அடிக்கடி திருச்சுழி தாலுகா அலுவலகம் சென்று வருகிறோம். மேலும், 2 பஸ்கள் மாறிச் செல்கிறோம். ஒருமுறை சென்று திரும்பினால் குறைந்தது ரூ.100 செலவாகிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் வசதியின்றி அவதிப்படுகிறோம். நரிக்குடியை தாலுகாவாக மாற்றினால் கிராம மக்கள் பயனடைவர்’ என்றனர்.

Related Stories: