×

தூய்மை இந்தியா திட்ட பணியில் முறைகேடு செம்மண்ணில் கட்டப்பட்ட கழிவறைகள் ஒப்பந்ததாரர் மீது பாளையன்கோட்டை மக்கள் புகார்

செம்பட்டி, ஏப்.22: பாளையன்கோட்டை ஊராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் செம்மண்ணை கொண்டு கழிவறை கட்டப்பட்டுள்ளது. இவை இடிந்து விழும் நிலையில் உள்ளன. எனவே ஒப்பந்தகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், செம்பட்டி அருகே பாளையன்கோட்டை ஊராட்சியில், பாளையன்கோட்டை, கூலம்பட்டி, பிரவான்பட்டி, காமன்பட்டி, தேவனூர், லட்சுமிபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. கிராம மக்களுக்காக தூய்மை இந்தியா திட்டம் மூலம் நூற்றுக்கணக்கான தனிநபர் கழிப்பறைகள் கட்டப்பட்டன. தனிநபர் கழிப்பறை கட்டுவதை ஒப்பந்தகாரருக்கு அதிகாரிகள் கமிசன் அடிப்படையில் வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் பாளையன்கோட்டை ஊராட்சியில் தனி நபர் கழிப்பறை திட்டம் தோல்வியடைந்துவிட்டது.

பல இடங்களில் செம்மண்ணை வைத்து கழிப்பறை கட்டியதால் இடிந்துவிட்டது. ஒருசில கழிப்பறைகளில் மூடி போடாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் யாரும் கழிப்பறையை பயன்படுத்த முடியவில்லை. பல இடங்களில் தனி நபர் கழிப்பறை கோழி மற்றும் ஆடுகளை அடைக்கும் தொழுவமாக மாறி வருகிறது. எனவே கழிப்பறையை சரியாக கட்டாத ஒப்பந்தகாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் நல்ல முறையில் கழிப்பறைகளை கட்டி தர வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மக்கள் எச்சரித்துள்ளனர்.

மக்கள் கூறுகையில், ‘‘பாளையன்கோட்டை ஊராட்சியில் பலருக்கு கழிப்பறை கட்டி கொடுத்துள்ளனர். இந்த கழிப்பறை முழுவதும் செம்மண்ணை வைத்து கட்டிக் கொடுத்துள்ளனர். வேகாத செங்கலை வைத்து கட்டியதால், மழை பெய்தால் கழிப்பறை இடிந்துவிழும் நிலையில் உள்ளது. பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டம் ஆத்தூர் யூனியன் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயலரின் கமிஷனால் முடங்கிவிட்டது அரசு பணமும் பாழாகிவிட்டது. எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பை காட்ட முடிவு செய்துள்ளோம்’’ என்றனர்.

Tags : Palayankottai ,toilet contractor ,
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!