×

பழநியில் மூலிகை ஆராய்ச்சி மையம் வேண்டும் சித்த மருத்துவர்கள் வலியுறுத்தல்

பழநி, ஏப்.22: பழநியில் மூலிகை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டுமென சித்த மருத்துவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநியில் சித்த மருத்துவ சங்கம் சார்பில் 11வது ஆண்டு உலக சித்தர் தினவிழா நேற்று நடந்தது. உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் குருமகான் தலைமை வகித்தார். மெய்த்தவ பொற்சபை நிறுவனர் மெய்த்தவ அடிகள், முன்னாள் மாவட்ட நீதிபதி பூபாலன், டிஎஸ்பி விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலாளர் ராஜம் வரவேற்றுப் பேசினார். விழாவில் 18 சித்தர்களின் உருவப்படங்கள் திறந்து வைக்கப்பட்டன. தொடர்ந்து பாரம்பரிய சித்த வைத்தியர்களுக்கு சிறப்பு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சித்த மருத்துவத்தின் தேவை, நன்மை, மக்களைச் சென்றடைய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. மூலிகை மற்றும் சித்த வைத்திய பொருட்களின் கண்காட்சிகள் நடந்தன.

விழாவில், பாரம்பரிய சித்த மருத்துவர்களை போலி மருத்துவர் என்று கூறக்கூடாது. பாரம்பரிய மருத்துவர்களின் தொழில் பாதுகாப்புகளை உறுதி செய்யும் வகையில் வரும் தேர்தலில் அரசியல் கட்சிகளிடம் சங்கத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய அங்கீகாரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். பாரம்பரிய மருத்துவர்களுக்கு தனிகவுன்சில் மற்றும் நலவாரியம் அமைக்க வேண்டும். பழநியில் விரைவில் சித்த மருத்துவக்கல்லூரி அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சித்த மருத்துவக்கல்லூரி அமைக்கும் இடத்தில் மூலிகை ஆராய்ச்சி மையம் மற்றும் மூலிகை தோட்டம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நிதி ஏற்படுத்தி அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழா ஏற்பாடுகளை சங்கத்தின் தலைவர் பாலமுரளி, துணைச்செயலாளர் அய்யப்பன், பொருளாளர் வள்ளிநாயகம் உள்ளிட்டோர் செய்திருந்தனர். விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : doctors ,Siddha ,palace ,research center ,
× RELATED சென்னை அருகே சித்த மருத்துவமனையில்...