×

காஞ்சி வரதராஜ பெருமாள் நடவாவி உற்சவம் கோலாகல கொண்டாட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம், ஏப்.22:  ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி நாளில், ஐயங்கார்குளம் பகுதியில் உள்ள, நடவாவி கிணற்றில் காஞ்சி வரதராஜ பெருமாள் எழுந்தருளும் நடவாவி உற்சவம் நடைபெறும். இதையொட்டி, இந்த ஆண்டு கடந்த 18ம் தேதி இரவு வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து புறப்பட்டு, செவிலிமேடு, புஞ்சையரசன் தாங்கல், தூசி, வாகை, நத்தக்கொள்ளை ஆகிய கிராமங்களுக்கு சென்று, 19ம் தேதி காலை சித்ரா பவுர்ணமி அன்று ஐயங்கார்குளம் சஞ்சீவராயர் கோயிலை சென்றடைந்தார். அங்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து, இரவு 8 மணிக்கு அங்குள்ள நடவாவி கிணற்றில் பெருமாள் எழுந்தருளினார்.

16 கால் மண்டபம் மற்றும் கிணற்றின் அருகே எழுந்தருளிய பெருமாளுக்கு, சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர், 9 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, பாலாறு சென்றடைந்தார். பாலாற்றில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் ஸ்ரீதேவி, பூதேவியருடன், பெருமாள் எழுந்தருளினார். அன்று இரவு அங்கு பெருமாள் மற்றும் தேவியருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதையடுத்து, பிரம்ம ஆராதனை முடிந்து, நள்ளிரவில் பெருமாள் தூப்புல் தேசிகர் கோயிலை சென்றடைந்தார். அங்கு பெருமாளுக்கு மரியாதை செலுத்தப்பட்டு, அங்கிருந்து புறப்பட்டு காலை, 7 மணிக்கு, பெருமாள் மீண்டும் கோயிலை சென்றடைந்தார். இந்த விழாசை காண காஞ்சிபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் இருந்து மக்கள் பாலாற்றுக்கு வந்து பெருமாளை வழிபாடு செய்தனர்.

Tags : Kanchi ,Varatharaja Perumal Natavavi Celebration Celebration Celebration: Massive Devotees Participation ,
× RELATED மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி