×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 சதவீதமே வாக்களித்த திருநங்கைகள்

காஞ்சிபுரம், ஏப்.22: கடந்த 18ம் தேதி நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளில் சுமார் 15 சதவீதத்துக்கும் குறைவானவர்களே வாக்களித்துள்ளனர். இதனால், மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சியடைந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் மொத்தத்தில் 18,26,614 ஆண்கள், 18,64,023 பெண்கள், திருநங்கைகள் 360 பேர்  என மொத்தம் 36,90,997 வாக்காளர்கள் உள்ளனர். இதில் காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் 7,94,839 ஆண்கள், 8,24,306 பெண்கள், 163 திருநங்கைகள் என மொத்தம் உள்ள 16,19,318 வாக்காளர்களில் சுமார் 12 லட்சத்து 14 ஆயிரத்து 86 பேர் வாக்களித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு தொகுதியில் உள்ள 57 திருநங்கைகளில் ஒருவர்கூட வாக்குப்பதிவு செய்யவில்லை. அதேபோல் ஸ்ரீ பெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் 11,22,731 ஆண் வாக்காளர்கள், 11,29,970 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 340 பேர் என மொத்தம் 22, 53,041 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 13,88,430 பேர் வாக்களித்துள்ள நிலையில், ஸ்ரீ பெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட அம்பத்தூர் மற்றும் தாம்பரம் சட்டமன்ற தொகுதிகளில் 129 திருநங்கைகளில் ஒருவரும் வாக்களிக்கவில்லை. இந்நிலையில் இரு மக்கவை தொகுதிகளிலும் சேர்த்து 513 பேர் உள்ள நிலையில், வெறும் 69 பேர் மட்டும் தங்களது ஜனநாயக கடமையை செய்துள்ளனர். ஜனநாயகம் தழைக்க 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பேரணி, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. திருநங்கைகளுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு சென்றடையாததால், வாக்குப்பதிவில் ஆர்வம் காட்டவில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags : Kanchipuram district ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை...