×

இடைத்தரகர்கள் பிடியில் இ-சேவை மையம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருவொற்றியூர், ஏப். 22: திருவொற்றியூரில் உள்ள இ-சேவை மையம் இடைத்தரகர்களின் பிடியில் சிக்கியுள்ளதால், உரிய ஆவணங்களை வைத்து விண்ணப்பித்தாலும் சான்றிதழ் கிடைப்பதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். வருவாய்த்துறை சார்பில் வழக்கப்படும் சாதி, வருமானம், இருப்பிடம், ஆதார் அட்டை உள்ளிட்ட சான்றிதழ்களை பொதுமக்கள் எளிமையாக பெறும் வகையிலும், ஸ்மார்ட் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்டவைகளை விண்ணப்பிக்கவும் தமிழக அரசு சார்பில் இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், துணை தாசில்தார் மற்றும் தாசில்தார் ஆகியோர் ஆய்வுக்குப்பின் ஆன்லைன் மூலமாகவே சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், திருவொற்றியூர் மண்டலத்தில் உள்ள இ-சேவை மையங்களில் சான்றிதழ்கள் கோரி பொதுமக்கள் விண்ணப்பித்தால் உரிய நேரத்திற்கு கிடைப்பதில்லை. மேலும் பல்வேறு காரணங்களை கூறி பெரும்பாலான விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என கூறப்படுகிறது.
இதனால் அரசின் சலுகை மற்றும் கல்வி கடன் பெற முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுவதோடு, ஆரம்ப பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க முடியாமல் பெற்றோர்கள் சிரமப்படும் நிலை உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இ-சேவை மையங்களில் சான்றிதழ்கள் பெற உரிய ஆவணங்களை வைத்து விண்ணப்பித்தாலும் உடனடியாக கிடைப்பதில்லை. இவ்வாறு கிடைக்காத பட்சத்தில் தாசில்தார் அலுவலகத்தை அணுகி விசாரிக்கும் போது, அங்கு இருக்கக்கூடிய சில இடைத்தரகர்கள் எங்களை அணுகி நீங்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பித்தால் உடனடியாக கிடைக்காது.

என்னிடம் கொடுங்கள். நான் உங்களுக்கு சான்றிதழ் வாங்கித் தருகிறேன். அதற்கு இவ்வளவு தொகை கொடுங்கள் என்று கேட்கின்றனர். இடைத்தரகர்களிடம் பணத்தை கொடுத்தால் சான்றிதழ் ஓரிரு தினங்களிலேயே கிடைத்து விடுகிறது. ஆனால் முறையாக விண்ணப்பித்தால் ஒரு மாதம் ஆனாலும் சான்றிதழ் கிடைப்பதில்லை. வேண்டுமென்றே அலைக்கழிக்கிறார்கள். இதற்கு தாசில்தார் அலுவலகத்தில் உள்ள வருவாய் துறை அதிகாரிகளும் அலுவலர்களும் உடந்தையாக உள்ளனர். எனவே இ-சேவை மையங்களில் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தாசில்தார் அலுவலகத்தையும் இ-சேவை மையங்களை கண்காணிக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags :
× RELATED திருவள்ளூர் அருகே தீ விபத்தில் சவுக்கு தோப்பு எரிந்து நாசம்