×

போலீஸ் இன்பார்மர் அடித்து கொலை? விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

நெல்லை, ஏப். 22:   நெல்லை அடுத்த முன்னீர்பள்ளம் அருகேயுள்ள தேசமாணிக்கபுரத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் விஜி என்ற விஜய சண்முகசுந்தரம் (35). இவர் முன்னீர்பள்ளம், பத்தமடை அருகேயுள்ள தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களில் அவ்வப்போது நடக்கும் மணல் திருட்டு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் நடைபெறும் சமூக விரோத செயல்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கலெக்டர், போலீஸ்  உயர் அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்தார். இதனால் போலீசார் மணல் கடத்தலை தடுப்பதோடு, அதில் ஈடுபடுவர்களையும் கைது செய்து வந்தனர். இதில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றால் அரசு உயர் அதிகாரிகளிடம் விஜி மீண்டும் புகார் மனு அளித்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் மணல் கடத்தல் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் விஜய சண்முகசுந்தரம் மீது ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 19ம் தேதி காலை விஜய சண்முகசுந்தரம் குடும்பத்தாரிடம் ராமேஸ்வரத்தில் சுவாமி கும்பிட்டு விட்டு வருவதாக கூறிச் சென்றார். இதனிடையே  மூன்றடைப்பு அருகேயுள்ள மருதகுளம் வாய்கால் கரையோரத்தில் நேற்று முன்தினம் மாலையில் முகம், கழுத்தில் காயங்களுடன் விஜய சண்முகசுந்தரம் நிர்வாணமாக இறந்து கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப் பதிந்தனர். மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள், விஜயசண்முகசுந்தரத்திற்கு மதுவை குடிக்க ெகாடுத்து ஏதேனும் ஆசைவார்த்தை கூறி அவரை ஏமாற்றி அழைத்து சென்று அடித்துக் கொன்றுள்ளனரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Murders ,investigation ,
× RELATED கிருஷ்ணகிரி அருகே உள்ள SBI வங்கி ATM-ஐ...