×

திருமணமான 3 மாதங்களில் நெல்லையில் போலீஸ்காரர் மனைவி மர்மச்சாவு

நெல்லை, ஏப். 22: நெல்லை வண்ணார்பேட்டையில் திருமணமான 3 மாதங்களே ஆன நிலையில் போலீஸ்காரரின் மனைவி தூக்கில் சடலமாகத் தொங்கினார். மர்மமான முறையில் அவர் இறந்தது குறித்து ஆர்டிஓ தீவிர விசாரணை நடத்துகிறார். நெல்லை, வண்ணார்பேட்டை கம்பராமாயணத் தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் முத்துகுமார் (32). போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவு பிரிவில் காவலர்களுக்கு உதவியாக செயல்பட்ட இவர் கடந்–்த 2016ம் ஆண்டு காவலராக தேர்வானார். தொடர்ந்து மணிமுத்தாறு 9வது பட்டாலியன் பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், பாளை கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த உறவினர் மதியழகனின் மகளும், பி.காம். பட்டதாரியுமான ஜெயசூர்யாவுக்கும் (23)  கடந்த ஜனவரி 30ம் தேதி திருமணம் நடந்தது. இதையடுத்து புதுமண தம்பதியர் நெல்லை வண்ணார்பேட்டை கம்பராமாயண தெருவிலுள்ள வீட்டின் மாடியிலும், முத்துகுமாரின் பெற்றோர் கீழ்த்தளத்திலும் வசித்து வந்தனர். இருப்பினும் கருத்துவேறுபாடு காரணமாக அவ்வப்போது தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே முத்துகுமார், கேரளாவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிக்கு கடந்த இரு நாட்களுக்கு முன்னரே அங்கு சென்றுவிட்டார். இதனிடையே நேற்று காலை நீண்டநேரமாகியும் குடிநீர் பிடித்துசெல்ல மாடியில் இருந்து ஜெயசூர்யா வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த முத்துகுமாரின் பெற்றோர், மாடிக்கு சென்று கதவை தட்டியபோதும் கதவு திறக்கப்படவில்லை.

 இதனால் பதறிய அவர்கள் அளித்த தகவலை அடுத்து விரைந்து வந்த ஜெயசூர்யாவின் குடும்பத்தினர் மாடியில் கதவை உடைத்து உள்ளே சென்றபோது ஜெயசூர்யா சேலையில் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தது கண்டு அழுது புரண்டனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பாளை இன்ஸ்பெக்டர் கண்ணன், நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து சென்றனர். மர்மமான முறையில் ஜெயசூர்யா இறந்தது குறித்து பாளை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
 இருப்பினும் ஜெயசூர்யாவின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகக் குற்றம்சாட்டிய அவரது உறவினர்கள் முத்துக்குமார் வீட்டுமுன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு சென்ற போலீஸ் அதிகாரிகள், சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரேத பரிசோதனைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இதனிடையே தகவலறிந்த முத்துகுமாரும் கேரளாவில் இருந்து நேற்று இரவு  நெல்லை திரும்பினார். திருமணம் முடிந்து 3 மாதங்களே ஆன நிலையில் ஜெயசூர்யா இறந்துள்ளதால், இதுகுறித்து ஆர்டிஓ நடத்தும் விசாரணைக்குப் பிறகே பிரேத பரிசோதனை நடக்கவுள்ளது. பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் சந்தேக மரணத்திற்கு விடை கிடைக்கும் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : Marmachhavu ,policeman ,
× RELATED டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது...