×

குஜிலியம்பாறை, பாளையம் பகுதியில் பாலித்தீன் பை பயன்பாடு தாராளம்

குஜிலியம்பாறை, ஏப். 21: குஜிலியம்பாறை மற்றும் பாளையம் கடைகளில் மீண்டும் பாலித்தீன் பை பயன்பாடு தாராளமாக உள்ளது. பாலித்தீன் பை பயன்பாடு குறித்து பாளையம் பேரூராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தமிழக அரசின் பாலித்தீன் பை தடை உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. பாலித்தீன் பயன்பாடு குறித்து மாவட்ட கலெக்டர் கண்டு கொள்வாரா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஜன.1 முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்து தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள சிறிய கடை முதல் பெரிய வணிக நிறுவனங்களில் ரெய்டு நடத்திய அதிகாரிகள், அங்கு பயன்பாட்டில் இருந்த பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தனர்.முன்னதாக கடந்த ஆண்டுகளில் தமிழக அரசு சார்பில், பாலித்தீன் பயன்பாட்டால் ஏற்படும் கேடு குறித்து பள்ளி, கல்லூரி, அரசுத்துறை, தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே பாலித்தீன் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்பட்டும், அதற்கு தடை விதித்தும், தடை மீறி பாலித்தீன் பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தும் கலெக்டர் வினய் அதிரடி நடவடிக்கை எடுத்தார். மேலும் மாவட்டம் முழுவதும் பாலித்தீன் தடை உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் குஜிலியம்பாறை மற்றும் பாளையத்தில் உள்ள மளிகைக் கடை, ஓட்டல், டீக்கடை, பேக்கரி, பெட்டிக்கடைகளில் மற்றும் இதர கடைகளில் பயன்பாட்டில் இருந்த பாலித்தீன் பைகளை பாளையம் பேரூராட்சி நிர்வாகம் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தது.அதன் பின்னர் கடைகளில் பாலித்தீன் பயன்பாடு இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தற்போது ஓட்டல், பேக்கரி, மளிகைக்கடை, கறிக்கடை, காய்கனிக்கடை, பெட்டிக்கடை, பழக்கடை என அனைத்து கடைகளிலும் மீண்டும் பாலித்தீன் பை பயன்பாடு தாராளமாக உள்ளது. மீண்டும் பாலித்தீன் பயன்பாடு குறித்து பாளையம் பேரூராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘குஜிலியம்பாறை மற்றும் பாளையம் பகுதியில் பாலித்தீன் பை தடை என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது. தமிழக அரசின் உத்தரவையும் மீறி பாலித்தீன் பயன்பாடு தாரளமாக உள்ளது.

இதுகுறித்து பாளையம் பேரூராட்சி நிர்வாகம் கடைகளில் பறிமுதல் செய்யவோ, அபராதம் விதிக்கவோ நடவடிக்கை எடுக்கவில்லை. இதை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டு கடைக்காரர்கள் தாராளமாக பாலித்தீன் பைகளை பயன்படுத்துகின்றனர். இதனால் மீண்டும் சாலை முழுவதும் பாலித்தீன் பை குப்பைகளாகவே உள்ளது. குஜிலியம்பாறை மற்றும் பாளையம் பகுதியில் பாலித்தீன் பயன்பாடு குறித்து மாவட்ட கலெக்டர் வினய் கண்டு கொள்வாரா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags : campus area ,
× RELATED செம்பட்டி பகுதியில் நடமாடும்...