கறம்பக்குடி அருகே குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்

கறம்பக்குடி, ஏப்.21:  கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் முள்ளங்குருச்சி ஊராட்சி சூரக்காடு கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.கடந்த சில நாட்களாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலமாக குடிநீர் வழங்காததால் அப்பகுதி பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் இதன் காரணமாக பெண்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் செல்லும் நிலை ஏற்பட்டது.  குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கோரி அப்பகுதி பொது மக்கள் பலமுறை ஒன்றிய நிர்வாகத்திடம் மனுக்கள்   அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் அப்பகுதி மக்கள்  சூரக்காடு பேருந்து நிறுத்தத்தில் திடீரென்று சாலை மறியலில்  ஈடுபட்டனர்.  உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் கழனியப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்  அமுதவல்லி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் இரண்டு தினங்களுக்குள் உடனடியாக குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.

Tags : Karambukudi ,road ,
× RELATED குடிநீர் வழங்கும் நீர்நிலையை...