×

பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோயில் சித்திரை திருவிழா மின் ஒயர்கள் குறுக்கிட்டதால் தேர் நடுவழியில் நிறுத்தம்

பூதப்பாண்டி, ஏப். 19: பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோயில் ரத வீதியில் மின் ஒயர்கள் குறுக்கிட்டதால் தேரோட்டம் தடைபட்டது.குமரி மாவட்டம் பூதப்பாண்டி  பூதலிங்க சுவாமி - சிவகாமி அம்பாள் கோயில் சித்திரை தேர் திருவிழா கடந்த 10ம்  தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 9வது நாளான நேற்று காலை  தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம்  பிடித்து இழுத்தனர். தேரோட்டம் நடைபெறும் போது வழக்கமாக ரத  வீதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மின்சார ஒயர்கள் மின்வாரியத்தால் கழற்றி விடப்படும். தேர் நிலைக்கு வந்தபிறகு மீண்டும் ஒயர்களை இழுத்து கட்டி மின் இணைப்பு  கொடுக்கப்படும். ஆனால் இந்தமுறை தேரோட்டம் நடைபெறும் ரத வீதியை அடுத்துள்ள  அரசு மேல்நிலைபள்ளி, ஜீவா அரசு பள்ளிகளில் நேற்று மக்களவை தேர்தல்  வாக்குப்பதிவு நடந்ததால், மின்வாரியத்தினர் மின்சார ஒயர்களை  கழற்றி விடவில்லை.

இதனால் காலை தேரோட்டம் தொடங்கி சிறிது தூரம்  தேர் சென்ற நிலையில், தொடர்ந்து இழுக்க முடியாமல் பக்தர்கள் தவித்தனர்.  களக்கம்பு பயன்படுத்தி ஒருசில இடங்களில் ஒயரை சற்று உயர்த்தி தேரை  இழுத்தனர். இருப்பினும் அடுத்தடுத்து பெரிய ஒயர்கள் குறுக்கே சென்றதால் அவற்றை  கடந்து தேரை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இது சம்பந்தமாக பூதப்பாண்டி  மின்வாரிய உதவி பொறியாளர் மாதவன்பிள்ளையை பக்தர்கள் தொடர்பு கொண்டு கேட்டனர். அதற்கு அவர்,  தேர்தல் கமிஷன் வாக்குப்பதிவு நாளில் மின்தடை இருக்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.  இது சம்பந்தமாக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருக்க வேண்டும்.  தேர்தல் ஆணையம் சொன்னால்தான் நாங்கள் மின்சாரத்தை நிறுத்த முடியும் என்று  தெரிவித்தார். அதனால் ஆத்திரம் அடைந்த பக்தர்கள் தேர் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் சம்பவ இடத்திற்கு மின்சார ஊழியர்கள்  அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் களக்கம்பு பயன்படுத்தி மின்சார ஒயர்களை  தேர் செல்வதற்கு வசதியாக உயர்த்தினர். அதைத் தொடர்ந்து தேரோட்டம்  நடைபெற்றது. இந்த சம்பவத்தால் பூதப்பாண்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : festival ,Bhattapandai Bhoothalingaswamy Temple Chithirai Chaiti ,
× RELATED சீனாவின் டிராகன் படகுத் திருவிழா கோலாகலம்..!!