×

கும்மிடிப்பூண்டி அருகே வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்

கும்மிடிப்பூண்டி, ஏப்.19: கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சி, நாகராஜ் கண்டிகை கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தை ஒட்டி தனியார் இரும்பு தொழிற்சாலை இயங்கியது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகை துகள் மற்றும் கழிவுநீரால் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட நெல், கரும்பு, வேர்க்கடலை, கம்பு உள்ளிட்ட உணவு பயிர்கள் பாதிக்கப்பட்டது. மேலும், நிலத்தடி நீர் மாசடைந்தது. அப்பகுதியினர் நுரையீரல், மூச்சுத்திணறல் என பல்வேறு பிரச்னைகளால் கடும் அவதியடைந்தனர்.இதனால் கடந்த 3 வருடங்களுக்கு முன் இரும்பு தொழிற்சாலையை மூட வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் அந்த நிறுவனம் மூடப்பட்டது. அதன்பிறகு கடந்த 3 மாதங்களுக்கு முன் பெயர்மாற்றம் செய்து அதே தொழிற்சாலையை இயக்கும் பணி  துவங்கியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் சாலை மறியல், முற்றுகை போராட்டம் மற்றும் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தும் அந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூட மாவட்ட நிர்வாகமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்போம் என்று அறிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பார்வதி சென்று அப்பகுதி பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.  ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.இந்த சூழ்நிலையில் அந்த பகுதி 52 எண் கொண்ட மையத்தில் வாக்குப்பதிவுக்கான பணிகள் நேற்று காலை தொடங்கியது.  ஆனால், வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றியிருந்த மக்கள், வாக்குப்பதிவு செய்ய காலை முதலே வாக்குச்சாவடிக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள், அப்பகுதி மக்களை சந்தித்து விளக்கம் கேட்டனர். அப்போது, ‘எங்கள் பகுதியில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இரும்பு தொழிற்சாலையை நிரந்தரமாக மூடுவதாக இன்று மாலைக்குள் அரசு தரப்பில் எழுத்துபூர்வமாக வாக்குறுதி கொடுத்தால்தான் ஓட்டு போடுவோம்’’ என்றனர். இதனால் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும்  கும்மிடிப்பூண்டி போலீஸ் துணை கண்காணிப்பாளர் கல்பனா தத் மற்றும் தேர்தல்  அதிகாரிகள் குழுவினர் வந்து கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்த முயன்றும்  முடியவில்லை. ெவறிச்சோடிய வாக்குச்சாவடி:நாகராஜ் கண்டிகையில் மொத்தம் 552 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஒரு அரசு அதிகாரியின் குடும்பத்தை சேர்ந்த 18பேர் வாக்கு பதிவு செய்தனர். மற்றவர்கள் புறக்கணித்ததால் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது.

Tags : Village villagers ,election ,homes ,neighborhood ,Gummidipoondi ,
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...