×

தனியார் ஆலையால் பாதிக்கப்படும் கேகே புதூர் கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு

மதுராந்தகம், ஏப். 19: மதுராந்தகம் அடுத்த கிணார் ஊராட்சி கே.கே.புதூர் கிராமத்தில் தனியார் மருத்துவ கழிவுகளை எரித்து அழிக்கும் ஆலை கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுகிறது.இங்கு, மருத்துவ கழிவுகளான ரப்பர் டியூப், குளுக்கோஸ் பாட்டில்கள் உள்பட பல்வேறு மருத்துவ கழிவுகள் எரித்து அழிக்கப்படுகிறது. இந்த ஆலையில் எரிக்கப்படும் மருத்துவ கழிவுகளால் வெளியேறும் புகை, கிராமத்தில் உள்ள பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக புகார் எழுந்தது.இதனால், சம்பந்தப்பட்ட தனியார் ஆலையை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அங்கு அழிக்கப்படும் கழிவுகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து விசாரிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனை கண்டித்து கடந்த 2ம் தேதி முதல் கிராம பெண்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், மக்களை தேர்தலை புறக்கணிப்போம் என கூறி வந்தனர். கேகே புதூர் கிராம பெண்களின் போராட்டம் நேற்று 17வது நாளாக தொடர்ந்தது.இந்நிலையில், கேகே புதூர் கிராமத்தை சேர்ந்த வாக்காளர்கள், நேற்று தமிழகம் முழுவதும் நடந்த மக்களவை தேர்தலை புறக்கணித்தனர்.இதுபற்றி அறிந்ததும் மாவட்ட எஸ்பி சந்தோஷ் ஹதிமானி, மேற்கண்ட கிராமத்துக்கு சென்று, பொதுமக்களிடம் வாக்களிப்பது ஜனநாயக கடமை. எனவே நீங்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதை ஏற்க மறுத்த மக்கள், மேற்கண்ட தனியார் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். அதுவரை வாக்களிக்க மாட்டோம் என திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

இதற்கிடையில், கேகே புதூர் அரசு பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையம், வெறிச்சோடி இருந்தது. 943 வாக்காளர்கள் கொண்ட இந்த கிராமத்தில் 20க்கும் குறைவானவர்கள் வாக்களித்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உயர் பொறுப்பில் இருக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் இந்த கிராமத்துக்கு வந்து எத்தனை பர், தனியார் ஆலையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வு செய்து, அரசுக்கு அறிவிக்க வேண்டும். அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றனர்.இது தொடர்பாக மாவட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.



Tags : village ,Kekku Pudur ,factory ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமம் ஒரு...