×

கிறிஸ்தவர்களின் தவக்காலத்தையொட்டி தேவாலயங்களில் புனித வியாழன் சிறப்பு வழிபாடு

பெரம்பலூர், ஏப். 19: கிறிஸ்தவர்களின் தவக்காலத்தையொட்டி பெரம்பலூர் தேவாலயங்களில் நேற்று நடந்த பெரிய வியாழன் நிகழ்ச்சியில் பாதங்களை கழுவி முத்தமிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று பெரியவெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரணமடைந்து பின்னர் உயிர்த்தெழுந்த நிகழ்ச்சிகளின் அடிப்படையில் கிறிஸ்தவர்களால் புனித வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று இயேசு கைது செய்யப்பட்டு மன்னர் பிலாத்து முன்னிலையில் நிறுத்தப்படும் முன்பாக, வியாழக்கிழமை இரவு தனது சீடர்களுடன் இரவு உணவு சாப்பிட்டபோது சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு யாரையும் தரம் குறைத்து மதிப்பிடாதீர்கள் என வலியுறுத்தும் விதமாக 12 சிறுவர்களின் பாதங்களை அந்தந்த தேவாலய பங்கு குருக்கள் கழுவி முத்தமிடும் நிகழ்ச்சி நடந்தது.

இதன்படி பெரம்பலூரில் புனித பனிமயமாதா தேவாலயத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு  பெரம்பலூர் வட்டார முதன்மை குரு ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். பெரம்பலூர் சமூக சேவை சங்க செயலாளர் சேவியர், துணை செயலாளர் ரெக்ஸ் அலெக்ஸ் சில்வஸ்டர், அன்னமங்கலம் விடுதி காப்பாளர் மார்சல் ஆண்டனி மற்றும் புனித தோமினிக் மேல்நிலைப்பள்ளி, புனித பாத்திமா தொடக்கப்பள்ளி, புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளின் அருட்சகோதரிகள், கத்தோலிக்க சங்கத்தினர், அன்பியம் குழுவினர் பங்கேற்றனர். முடிவில் திருப்பலி நடந்தது. இதேபோல் பாளையம் கிராமத்தில் பங்குகுரு ஜான்கென்னடி தலைமையிலும், தொண்டமாந்துறை, அன்னமங்கலம், நூத்தப்பூர், பாத்திமாபுரம், திருவாளந்துறை, திருமாந்துறை, வடக்கலூர், பெருமத்தூர், எறையூர், பாடாலூர் பகுதிகளில் அந்தந்த தேவாலயங்களின் பங்கு குருக்கள் தலைமையில் பாதம் கழுவும் கடைசி இரவு உணவு நிகழ்ச்சி நடந்தது.

Tags : churches ,Christians ,
× RELATED புனித வியாழனை முன்னிட்டு கிறிஸ்தவ...