×

புரசைவாக்கம் வாக்குச்சாவடியில் 400 வேட்பாளர்கள் பெயர் நீக்கம்... பாதிக்கப்பட்டவர்கள் கொந்தளிப்பு

சென்னை: புரசைவாக்கம் வாக்குச்சாவடியில் 400 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இல்லை என்று கூறி அதிகாரிகள் திருப்பி அனுப்பியதால், பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புரசைவாக்கம் மார்க்கெட் அருகில் உள்ள பாலர் கல்வி எஜூகேஷன் சென்டரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மையத்தில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆனால் ஒரு கட்டத்தில் வரிசையில் நின்றவர்களில் 400க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர் பட்டியலில் இல்லை. இதனால், அவர்களை வாக்களிக்க விடாமல் அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். இவர்களில் பலர் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதுடன், கடந்த தேர்தல் வரை வாக்களித்தவர்களின் பெயர்களும் இடம்பெறவில்லை. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நேற்று காலை வாக்களிக்க வந்தவர்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை வைத்து சரிபார்த்த போது, ஒரே குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பேருக்கு மட்டுமே வாக்குரிமை உள்ளது. மற்றவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை, என அதிகாரிகள் கூறினர்.

 சில குடும்பத்தில் தந்தை பெயர் மட்டும் இருந்தது. மற்றவர்கள் பெயர்கள் அனைத்தும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது. கடந்த தேர்தலில் வாக்களித்த நிலையில், இந்த தேர்தலில் மட்டும் எப்படி வாக்காளர் பட்டியலில் இருந்து எங்களை நீக்கியிருக்கிறார்கள். இது யார் செய்த சதி? என்பது பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  பாதிக்கப்பட்ட வாக்காளர் ஒருவர் கூறுகையில், ‘‘கடந்த 40 ஆண்டாக நான் இதே மையத்தில் வாக்களித்து வருகிறேன். இந்த தேர்தலில் மட்டும் எனது குடும்பத்தில் 7 பேர் பெயரை நீக்கியிருக்கிறார்கள். நீக்குவதாக இருந்தால் ஒட்டுமொத்தமாக நீக்கியிருக்க வேண்டும். இந்த வாக்குப்பதிவு மையத்தில் மட்டும் வாக்களிக்க வந்தவர்களில் 400 பேர் வரை இதேபோன்று வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இது யார் செய்த சதி என்று தெரியவில்லை? ஆளுங்கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதற்காக இதுபோன்ற சதி வேலைகளில் ஆளும் தரப்பு ஈடுபட்டதா? அல்லது தேர்தல் ஆணையத்தின் அலட்சியப் போக்கா என்பதை தேர்தல் ஆணையம் தான் விளக்க வேண்டும்’’ என்றனர்.

அதேபோல், ஷெனாய் நகர் அப்பாராவ் கார்டனில் 250க்கும் மேற்பட்டவர்களின் பெயர் பட்டியலில் இல்லை. அவர்கள் அனைவரிடமும் வாக்காளர் அடையாள அட்டை இருந்தது. இதனால், அவர்கள் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர்களின் கேள்விகளுக்கு அதிகாரிகளால் பதில் சொல்ல முடியவில்லை. இதனால் மக்கள் அதிருப்தியுடன் கலைந்து சென்றனர்.அதேபோல், தாம்பரம் தொகுதியில் அமைக்கப்பட்ட 416 வாக்குச்சாவடிகளில் நேற்று காலை முதல் ஏராளமான வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வந்தபடி இருந்தனர். அப்போது பெரும்பாலான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இல்லாததால் ஆவேசமடைந்தனர். இதில் சிலர் வாக்குச்சாவடியில் இருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : nominees ,polling booth ,
× RELATED சாத்துக்குடி மூட்டை ரூ. 400 கொரோனாவால்...