×

திருவாரூர் எம்எல்ஏ தொகுதியில் பல்வேறு வாக்கு சாவடிகளில் இயந்திரம் பழுது: திமுக வெற்றியை தடுக்க சதியா? வாக்காளர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

திருவாரூர், ஏப். 19: திருவாரூர் எம்எல்ஏ தொகுதியில் நேற்று காலை வாக்கு பதிவு துவங்கியவுடனே பல்வேறு இடங்களில் வாக்கு பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்ட நிலையில் திமுகவின் வெற்றியை தடுப்பதற்காகவே அலுவலர்கள் சூழ்ச்சி செய்ததாக வாக்காளர்கள் குற்றம்சாட்டினர்.
நாகை எம்பி தொகுதியுடன் சேர்த்து திருவாரூர் எம்எல்ஏ தொகுதியின் இடைத்தேர்தலும் நேற்று நடைபெற்றது.  அதன்படி இந்த தொகுதிக்குட்பட்ட திருவாரூர் நகரில்  காரைகாட்டு தெருவில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி மற்றும் கீழப்படுகை, எண்கண் உட்பட பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்காளர்கள் காலை 7 மணிக்கு முன்பாக நீண்ட  வரிசையில் காத்திருந்தும் தங்களது வாக்கினை சரியான நேரத்தில் செலுத்த முடியாமல் போனது.

மேலும் இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பூண்டி கலைவாணன் வெற்றி என்பது ஏற்கனவே நூறு சதவிகிதம் உறுதி ஆன நிலையில் திமுகவின் வெற்றியை தடுப்பதற்காக அலுவலர்கள் சூழ்ச்சி காரணமாக பல்வேறு இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது என்று காரணம் கூறி வாக்கு பதிவினை தாமதம் செய்ததாக வாக்காளர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும்  காலை 9 மணி நிலவரப்படி நாகை எம்பி தொகுதிக்குட்பட்ட நாகை எம்எல்ஏ தொகுதியில் 9 சதவீதமும், கீழ்வேளூரில் 9 சதவீதமும், வேதாரண்யத்தில் 11 சதவீதமும், திருத்துறைப்பூண்டியில் 11.23 சதவீதமும், திருவாரூரில் 4.48 சதவீதமும், நன்னிலத்தில் 5 சதவீதமும் வாக்குகள் பதிவாகிய நிலையில் திருவாரூர் எம்எல்ஏ தொகுதியில் மட்டும் மிக மிக குறைவாக 4.48 சதவீத வாக்குகள் பதிவாகிய சம்பவம்  தொகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் படிப்படியாக மாற்றப்பட்டதன் காரணமாக அடுத்தடுத்து வாக்கு பதிவு வேகமாக நடைபெற்றது.

காலை 11 மணியளவில் 21.82 சதவிகித வாக்குகளும், மதியம்  ஒரு மணியளவில் 36.61 சதவிகித வாக்குகளும், 3 மணியளவில் 52.63 சதவிகித வாக்குகளும், 5 மணியளவில் 65.59 சதவிகித வாக்குகள் என மற்ற எம்எல்ஏ தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கு இணையாக பதிவானது குறிப்பிடத்தக்கது.

50 வாக்கு சாவடிகளில் வாக்கு பதிவு பாதிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக சுமார் ஒரு மணிநேரம் வரையில் வாக்கு பதிவு நடைபெறுவது தடைபட்டது. மேலும் ஒரு சில வாக்குச்சாவடிகளில் மாலை 6.30  மணி வரையிலும், இரவு 7 மணி வரையிலும் வாக்குப்பதிவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 எம்எல்ஏ தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் இதற்கான வாக்கு பதிவு என்பது காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் நடைபெற்றது. இந்நிலையில் இதுவரையில் நடைபெற்ற தேர்தல்களில் இல்லாத வகையில் நேற்று மாநிலம் முழுவதும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பெரும்பாலான வாக்குசாவடிகளில்  பழுதானதன் காரணமாக வாக்குப்பதிவு நடைபெறுவது  அரை மணி நேரம், ஒரு மணி நேரம், 2 மணி நேரம் என பலவகையிலும் பாதிக்கப்பட்டது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்திலும் நேற்று இதுபோன்று வாக்குப்பதிவு இயந்திரம் பழுது மற்றும் முகவர்கள் வருவதற்கு தாமதமானது உட்பட பல்வேறு காரணங்களினால் சுமார் 50க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு தடைபட்டது. அதன்படி குளிக்கரை, கொரடாச்சேரி, ஆணைவடபாதி, கண்கொடுத்தவனிதம், எண்கண், மணக்கால், குடவாசல், மாப்பிள்ளைகுப்பம், நன்னிலம் மற்றும் திருவாரூர் உட்பட பல்வேறு பகுதிகளில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டதால் வாக்குப் பதிவுக்கு தடை ஏற்பட்டது.

இதனையடுத்து முகவர்களும் அரசியல் கட்சியினரும் வாக்குப்பதிவு அலுவலர்களிடம் வாக்குப்பதிவு நேரத்தினை அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். பெரும்பாலான வாக்குப்பதிவு அலுவலர்கள் மறுத்த நிலையில் நன்னிலம் பகுதியில் ஒரு சில வாக்குச் சாவடியில் மட்டும் மாலை 6.30 மணி மற்றும் இரவு 7 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு  அனுமதி வழங்கப்பட்டதையடுத்து அங்கு வாக்காளர்கள் இரவு 7 மணி வரையில் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

Tags : DMK ,victory ,voting booths ,constituency ,Voter scandal ,Thiruvarur MLA ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்