×

களை கட்டிய தேர்தல் திருவிழா நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்ட வாக்காளர்கள்

ஆத்தூர், ஏப்.19: சேலம் மாவட்டத்தில் நேற்று காலை முதலே தேர்தல் திருவிழா களை கட்டியது. ஜலகண்டாபுரத்தில் வாக்குப்பதிவின்போது திடீரென பெய்த மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மூத்த குடிமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். ஆத்தூர் முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த செந்தில்ராஜா என்பவர், நேற்று வாக்களித்து விட்டு திரும்பியபோது, வாக்குச்சாவடி மையத்திற்கு அருகிலேயே வாக்கு சேகரித்ததாக கூறி சிலரை தட்டிக்கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, வீடு திரும்பிய செந்தில்ராஜாவை மர்ம கும்பல் வீடு புகுந்து தாக்கியது. இதில், காயமடைந்த அவர், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒரு சில வாக்குச்சாவடிகளில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததால், மாதிரி வாக்குப்பதிவு நடைபெறவில்லை.

மல்லியகரையில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில்(எண்-241,244) தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள், ஆளுங்கட்சியினருக்கு வாக்களிக்க வற்புறுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டதால் சலசலப்பு உருவானது. இதையடுத்து, மண்டல தேர்தல் அலுவலர் அங்கு விரைந்து வந்து பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆத்தூர் நகராட்சி 18வது வார்டு அதிமுக செயலாளர் ராஜேந்திரன், தண்டுவட அறுவை சிகிச்சை செய்திருந்தார். அவர், ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிஎஸ்ஐ பள்ளி வாக்குச்சாவடி மையத்திற்கு காலை 10.30 மணியளவில் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். ஆத்தூர் தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களிலும், குறிப்பிட்ட நேரமான 6 மணிக்குள் வாக்குப்பதிவு முடிந்தது. இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இடைப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில், மாலை 4 மணி முதல் 4.45 மணி வரை, பலத்த மழை பெய்தது. கொட்டிய மழையிலும் வாக்குச்சாவடி மையத்தில் காத்திருந்து பொதுமக்கள் ஜனநாயக கடமையாற்றினர்.

இடைப்பாடி தாவாந்தெரு, மேட்டுப்பட்டி, கவுண்டம்பட்டி, ஆலச்சம்பாளையம், ஏரிரோடு, க.புதூர், சின்னமணலி, ஆவணியூர், வெள்ளநாயக்கன்பாளையம், நாச்சிப்பாளையம், மோட்டூர் பகுதியில் சற்று தாமதமாக வந்தவர்கள் மழையில் சிக்கிக்கொண்டனர். வெள்ளாண்டிவலசு, நைனாம்பட்டி, இடைப்பாடி பஸ் ஸ்டாண்ட் பகுதி, ஆவணியூர் கோட்டை மற்றும் கொங்கணாபுரம், பூலாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் மாலை 6 மணிக்கு மேல் வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் வழங்கி, வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அமமுக வேட்பாளர் எஸ்.கே.செல்வம் வாக்களிப்பு:  சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூலாவரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில், முகவர்கள் தாமதமாக வந்ததால், காலை 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு 7.15 மணிக்கு தொடங்கியது. அப்போது, வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதனிடையே, சேலம் நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் எஸ்.கே.செல்வம், தனது மனைவி ராதா, தந்தை குப்புசாமியுடன் பூலாவரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு, காலை 7.15 மணிக்கு வந்தார். பின்னர், வரிசையில் நின்ற எஸ்.கே.செல்வம் தனது வாக்கை பதிவு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘எனது வெற்றி பிரகாசமாக உள்ளது,’ என்றார்.சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் தனது மனைவி சுசீலாவுடன், நேற்று காலை 8 மணியளவில், சேலம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில், வாக்காளர்களுடன் வரிசையில் நின்று ஓட்டு போட்டார். சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், சோளம்பள்ளம் அருகேயுள்ள அரசு பள்ளியில், காலை 7 மணியளவில் வாக்களித்தார். சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சக்திவேல், அம்மாப்பேட்டை அருணகிரி தெருவில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் வாக்களித்தார். வீரபாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி, பாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார்.   

சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, பூலாவரியில் உள்ள உயர்நிலை பள்ளியில் தனது வாக்கை அளித்தார். ஜலகண்டாபுரம்:  ஜலகண்டாபுரம் சவுரியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் 6 பூத்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில், 4500 பேர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதியம் திடீரென மழை பெய்ததால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. 3 முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மாற்று ஏற்பாடு செய்யப்படாத நிலையில், வாக்குச்சாவடி மையத்திற்குள் கும்மிருட்டு நிலவியது. இதனால், சின்னங்களை சரியாக அடையாளம் காண முடியாமல், மூத்த குடிமக்கள் தடுமாறியதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது.

Tags : polling festivals ,voters ,run ,
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...