×

திருச்செங்கோடு, கொல்லிமலையில் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

திருச்செங்கோடு, ஏப்.19: திருச்செங்கோடு அருகே அணிமூர் கிராமத்தில், திருச்செங்கோடு நகராட்சிக்கு சொந்தமான 5 ஏக்கர் குப்பை கிடங்கு மற்றும் உரம் உற்பத்தி செய்யும்  நிலையம் உள்ளது. திருச்செங்கோடு நகரில் உள்ள 33 வார்டுகளிலும் தினந்தோறும் 34 மெட்ரிக் டன் குப்பை கழிவுகள்  சேரிக்கப்படுகின்றன. இதில் 20 மெட்ரிக் டன் மக்கும் குப்பை.  14 மெட்ரிக் டன் மக்காத குப்பை  ஆகும். கடந்த 10 ஆண்டுகளாக நகராட்சியில் சேகரிக்கப்படும்  குப்பை கழிவுகள்,  அணிமூரில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி, தரம் பிரித்து  உரமாக மாற்றப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக நகராட்சி குப்பை கழிவுகளை கொட்டியதால், அணிமூர் கிராமத்தில்  நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதாக,  அந்தப் பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.  அதனால் குப்பை கிடங்கை  அங்கிருந்து இடமாற்ற வேண்டும்  என்று கோரிக்கை வைத்தனர். மேலும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில்,  குப்பைகளை அணிமூரில் கொட்டக்கூடாது என்றும், தங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் நாடாளுமன்ற  தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும், கடந்த 9ம் தேதி அணிமூர் கிராம மக்கள்  அறிவித்தனர். அதன்படி, நேற்று  அணிமுர் கிராம மக்கள் ஓட்டுபோடச் செல்லாமல் தேர்தலை புறக்கணித்தனர். இதுகுறித்த தகலறிந்து அங்கு வந்த திருச்செங்கோடு ஆர்டிஓ மணிராஜ், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், பொதுமக்கள்  சமாதானம் அடையவில்லை. அணிமுர்  ஆர்சி பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குசாவடி எண் 225ல்  677 வாக்காளர்களும், 226 வது வாக்குச்சாவடியில் 608 வாக்காளர்களும் மொத்தம் 1,285 வாக்காளர்கள் உள்ளனர். மாலை 6 மணி வரை கிராம மக்கள் யாரும் ஒட்டு போடவில்லை. தேர்தல் பணிக்கு அங்கு வந்த 13 பேர்  மட்டுமே வாக்களித்தனர். இதையடுத்து தேர்தல் அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்துச்சென்றனர்.

Tags : Kollimalai ,
× RELATED கொல்லிமலை காப்புக்காட்டில் சுற்றுலா...