×

கிருஷ்ணகிரி, ஓசூர் பஸ் நிலையத்தில் வாக்களிக்க சொந்த ஊர் செல்ல அலைமோதிய மக்கள் கூட்டம்

கிருஷ்ணகிரி,  ஏப்.19:  கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில், நேற்று காலை போதிய பஸ்கள்  இல்லாததால் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக மக்கள் கூட்டம்  அலைமோதியது. தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகள், 18 சட்டமன்ற  தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் 100 சதவீதம்  வாக்களிக்க  தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. இந்த தேர்தலை முன்னிட்டு  வாக்களிக்க வசதியாக, பல்வேறு நிறுவனங்கள் விடுமுறை விட்டிருந்தன.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, சூளகிரி, ஓசூர் உள்பட பல்வேறு  இடங்களில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பலரும் தொழில் நிமித்தமாக  குடியேறியுள்ளனர். அவர்கள் ஓட்டு சொந்த ஊர்களில் இருப்பதால் அவர்கள்  வாக்களிப்பதற்காக தங்களின் சொந்த ஊர்களுக்கு கடந்த 2 நாட்களாக சென்ற வண்ணம்  இருந்தனர். அதன்படி, கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி பகுதியில் இருந்து  தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிப்பதற்காக பஸ்களில் செல்ல பஸ்  நிலையத்திற்கு ஆயிரக்கணக்கான பயணிகள் வந்திருந்தனர்.

இதனால் பஸ்  நிலையங்கள் முழுவதும் பயணிகள் கூட்டமாக காணப்பட்டது. குறிப்பாக வேலூர்  மாவட்டம் ஆம்பூர் மற்றும் திருவண்ணாமலை, சேலம் சுற்று வட்டார பகுதிகளுக்கு  ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாக்களிக்க புறப்பட்டு சென்றனர். இதன் காரணமாக  பஸ்களின் படிகளில் நின்றபடியும், தொங்கியபடியும் பயணம் செய்தனர். இதற்கிடையே  ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கும், பிற ஊர்களுக்கு செல்ல ஏராளமான பயணிகள்  காத்திருந்தனர். ஆனால் போதிய அளவு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள்  கடும் அவதிக்குள்ளானார்கள். ஒரு கட்டத்தில் பயணிகள் சாலை முன்பு திரண்டு  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்து, கூடுதலாக  பஸ்களை வரவழைத்து அனுப்பி வைத்தனர். அதுபோல், ஓசூர் பஸ் நிலையத்தில்  நேற்று காலை போதிய பஸ்கள் இல்லாததால், வெளியூர்களுக்கு வாக்களிக்க செல்ல  முடியாமல் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர். கர்நாடக மாநிலம்  பெங்களூரு, மைசூர், மங்களூர் ஆகிய இடங்களில் வேலை செய்து வரும்  திருவண்ணாமலை, வேலூர், சேலம், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டத்தை  சேர்ந்தவர்கள் நேற்று காலை ஓசூர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்தனர். ஆனால் போதிய  பஸ்கள் இல்லாததால் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் ஒரு கிலோ மீட்டர்  தூரம் வரை தேசிய நெடுஞ்சாலையில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

இதுகுறித்து  பொதுமக்கள் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்தடுத்த தொடர்  விடுமுறை வருவதால் சொந்த ஊர்களுக்கு சென்ற வாக்களிக்க குடும்பத்துடன்  செல்கிறோம். நேற்று இரவு 9 மணி முதல் ஓசூர் பஸ் ஸ்டாண்டில்  காத்திருக்கிறோம். ஆனால் போதிய பஸ்கள் இல்லை. வரும் ஒரு சில பஸ்களில்  உட்கார இடமில்லாததால், குழந்தைகளை அழைத்துச்செல்ல முடியாமல், 12 மணி நேரமாக  ஓசூர் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கிறோம். போக்குவரத்து கழக அதிகாரிகள்,  இனிமேலாவது இதுபோன்ற சமயங்களி–்ல கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்றனர்.

Tags : Krishnagiri ,crowd ,hometown ,bus station ,Hosur ,
× RELATED மகாராஷ்டிராவில் சிக்கி தவித்த 252 பேர்...