பெரிய வியாழனை முன்னிட்டு தூத்துக்குடி தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

தூத்துக்குடி,ஏப்.19: தூத்துக்குடி கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வியாழனை முன்னிட்டு பாதம் கழுவுதல் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளி என்றும் அவர் உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாகவும் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முதல்நாள் இரவு தனது சீடர்களுக்கு ராப்போஜன விருந்து அளித்தார்.அப்போது சீடர்களுக்கு தாழ்மையாக இருக்கவேண்டுமென்பதையும், யாரும் பெரியவர்கள் அல்ல என்பதையும் வலியுறுத்தும் விதமாகமாக சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டார்.  இதனை ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறும் விதமாக கிறிஸ்தவ தேவயாலங்களில் புனித வெள்ளிக்கு முதல்நாளான வியாழக்கிமையன்று திருப்பலி நேரத்தில் இறைமக்களின் பாதங்களை கழுவி திருவிருந்து வழங்குவது நடந்து வருகிறது.  அதன்படி தூத்துக்குடி சின்னகோவில் என்று அழைக்கப்படும் திரு இருதயங்களின் பேராலயத்தில் ஆயர் அந்தோணி ஸ்டீபன்,  இறைமக்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு நற்கருணை வழங்கினார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பெரிய வியாழனை முன்னிட்டு தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்திலும் பங்கு தந்தை லெரின் டி ரோஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

Related Stories: